கோட்டாவின் செயற்பாடுகளினால் இ.தொ.கா கடும் அதிருப்தி – ஜீவன் தொண்டமானுடன் தர்க்கத்தில் ஈடுபட்ட முக்கிய அமைச்சர்?

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீதான நம்பிக்கையை இழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர் ஒருவரினை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று இதுகுறித்த செய்தியினை வெளியிட்டுள்ளது.

கடந்த வருடம் இரசாயன உர இறக்குமதியை தடைசெய்வதற்கு கட்சியினால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும், ஜனாதிபதியின் தீர்மானம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் நடைபெற்ற அனைத்துக் கட்சி மாநாட்டை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் புறக்கணித்தமைக்கான முக்கிய காரணங்களில் ஒன்று உரத்தடையானது தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கமே எனவும் குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், இலங்கை தொழிலாளர் காங்கிரசும் ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட பல தீர்மானங்கள் குறித்து அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

குறிப்பாக “ஜனாதிபதி எங்கள் பேச்சைக் கேட்பதில்லை. நாங்கள் எங்கள் கவலைகளை பிரதமரிடம் தெரிவித்துள்ளோம்,” என கட்சியின் முக்கிஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, சர்வக் கட்சி மாநாட்டை புறக்கணித்தமை தொடர்பாக அரசாங்கத்தின் இரண்டு முக்கியஸ்தர்கள், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற உணவகத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் குறித்த விடயத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்து கொண்டு, சர்வக் கட்சி மாநாட்டை புறக்கணித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அப்படி செய்ய வேண்டுமாயின் அமைச்சர் பதவியில் இருந்து விலகி விட்டுஅதனை செய்ய வேண்டும் என குறித்த அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் கூறியுள்ளார்.

இதன் போது பதிலளித்துள்ள ஜீவன் தொண்டமான், அமைச்சராக பதவி வகித்து கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பதா இல்லையா என்பது தொடர்பான தீர்மானத்தை எடுப்பது தான் எனவும், அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதா இல்லையா என்பதை கட்சி முடிவு செய்யும் எனவும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.