கோட்டாவுக்கும் ரணிலுக்கும் இடையில் பகைமை அதிகரித்து வருகிறது – மைத்திரி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் ஒரு போட்டி போன்று பகைமை அதிகரித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அப்போது ஜனாதிபதியாக இருந்த தமக்கும் பிரதமராக இருந்த ரணிலுக்கும் இடையில் இருந்த போட்டியைப் போன்றே இதுவும் உள்ளதாகஅவர் கூறியுள்ளார்.

கட்சி அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இருவருக்குமிடையில் ஒருங்கிணைப்பு, பரஸ்பர புரிந்துணர்வு அல்லது ஒற்றுமை இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறதென்றும் அதனால்தான் கோட்டாபய ராஜபக்ஷ – ரணில் விக்ரமசிங்க ஆட்சி முழுத் தோல்வியடைந்து நாட்டையும் அதன் 22 மில்லியன் மக்களையும் ஆழமற்ற படுகுழிக்குள் இழுத்துச் சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளர்.

அரச அதிகாரிகள், தனியார் துறை மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளை தனித்தனியாக கூட்டி ஆலோசனைகளை வழங்குவதை ஜனாதிபதியும் பிரதமரும் தற்போது வழக்கமாக கொண்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சில சமயங்களில் இருவரும் ஒருவரையொருவர் தோற்கடிக்கும் போட்டியில் ஈடுபடுவது போல் தெரிகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.