“கோட்டா கோ கம ” வுக்கு ஒரு மாதம் : உடுக்கு அடித்து மாடன் பத்திரகாளி பூஜை, மரணச்சடங்கு என பல பரிணாமங்களில் போராட்டங்கள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவியில் இருந்து விலகுமாறு கோரி மக்களால் ஆரம்பிக்கப்பட்ட “கோட்டா கோ கம” எழுச்சிப் போராட்டத்திற்கு இன்று ஒரு மாதம் நிறைவடைகின்றது.

குறித்த போராட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து போராட்டத்தின் தன்மை பல்வேறு பரிமாணம் எடுத்தது.

இதன்படி மே மாதம் 7 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8 மணிக்கு உடுக்கு அடித்து மொடன் பத்திரகாளி பூஜை இடம்பெற்றது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமது நோய்பிணிகளை அகற்றுவதற்கு தனது எதிரிகளை வெல்வதற்கு, தக்கெதிரான அநியாயங்களை , வன்முறைகளை தடுப்பதற்கு உடுக்கு அடித்து அருளாடி மனிதருள் மொடன் – காளி உருவேறி தீர் சொல்லும் தெய்வீக சம்பிரதாயம் காலாகலமாக மலையகத்தில் இடம்பெற்ற வருகின்றது. அதனையொத்த பூஜையே இடம்பெற்றது.

உடுக்கு, பறை இசை முழங்க இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதேவேளை, நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவு அலரி மாளிகைக்கு முன்னால் இடம்பெறும் மைனா கோ கமவுக்கு முன்னால் சிங்கள முறைப்படி மரணச் சடங்கு நிறைவேற்றும் நிகழ்வு இடம்பெற்றது.

ஆரம்பத்தில் பொது மக்கள் மாத்திரம் இந்த அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் , பின்னர் மதத் தலைவர்கள் , சட்டத்தரணிகள், நிபுணர்கள் உள்ளிட்ட பல தரப்பினராலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் பல நிறுவனங்கள் மற்றும் தொழில்சார் வல்லுனர்களும் போராட்டத்தில் இணைந்துகொண்டனர்.

‘பக்க சார்பற்ற மக்கள் எழுச்சிப் போராட்டம்’ என்ற கருப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் பொது மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் கடந்த ஒரு மாத காலமாக இடைவிடாது கொட்டும் மழைக்கு மத்தியிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த போராட்டம் உலகளாவிய ரீதியில் பலரை ஈர்த்த ஒரு ஜனநாயக வழிப் போராட்டமாக அமைந்ததோடு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் சிந்தனைகளும் பாராட்டப்பட்டு வருகின்றது.

நாடளாவிய ரீதியில் வியாபித்த கோட்டா கோ கம போராட்டம் கண்டி, காலி, மாத்தறை, வடக்கு, மலையகம், கிழக்கு போன்ற பல பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இலங்கையில் முன்னெடுக்கப்படும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் வெளிநாடுகளிலுள்ள இலங்கை பிரஜைகளும் அந்நாடுகளில் தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதற்மைய இத்தாலி, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, சுவிற்சர்லாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளிலும் ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அத்துடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகைக்கு முன்னால் “ மைனா கோ கம ” என்றும் பாராளுமன்ற பகுதியில் “ஹொரு கோ கம” என்ற தொனிப்பொருளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.