இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மிகவும் சீர்குலைந்துபோயுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியைக் கையாளுதல் என்ற போர்வையில் மனித உரிமைகளை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் இலங்கையின் நிலைவரங்கள் தொடர்பில் மிகநெருக்கமான கண்காணிப்புக்களை மேற்கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட வேண்டும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமானதுடன் அன்றைய தினம் இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டின் வாய்மூல அறிக்கையும் வெளியிடப்பட்டது.
அதனைத்தொடர்ந்து நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற இரண்டாம்நாள் அமர்வில் இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உரையாற்றியிருந்ததுடன் ஆணையாளர் மிச்சேல் பல்லெட்டின் அறிக்கை தொடர்பில் ஏனைய உறுப்புநாடுகள் தமது நிலைப்பாடுகளை வெளியிட்டிருந்தன.
இந்நிலையில் இன்று புதன்கிழமை மூன்றாம்நாள் அமர்வின்போது ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் வெனிசூலா ஆகிய நாடுகளின் மனித உரிமை நிலைவரங்கள் தொடர்பில் ஆணையாளர் மிச்சேல் பல்லெட்டினால் வெளியிடப்பட்ட வாய்மூல அறிக்கை தொடர்பில் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் தமது நிலைப்பாட்டை அறிவித்தன. அதன்படி சர்வதேச யூரர்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாடு தொடர்பில் தெளிவுபடுத்திய அதன் சிரேஷ்ட சட்டத்தரணி மஸ்ஸிமோ ப்ரிகோ மேலும் கூறியதாவது:
ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் வெனிசூலா ஆகிய நாடுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளியிடப்பட்ட வாய்மூல அறிக்கையைப் பெரிதும் வரவேற்கின்றோம். குறிப்பாக ஆப்னாஸ்தானில் மிகமோசமடைந்துவரும் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் மனித உரிமைகள் பேரவையின் உடனடி நடவடிக்கை அவசியமாகின்றது.
இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மிகவும் சீர்குலைந்துபோயுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியைக் கையாளுதல் என்ற விடயம் (காரணம்) சட்டக்கடப்பாடுகளை மீறுவதற்கும் நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையில் தலையீடு செய்வதற்கும் மனித உரிமைகளைத் தன்னிச்சையாக மட்டுப்படுத்துவதற்கும் தன்னிச்சையான கைது மற்றும் தடுத்துவைப்பின் ஊடாக அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றது.
அதுமாத்திரமன்றி மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் மேலும் பின்னடைவைச் சந்தித்துள்ளமை தொடர்பில் பெரிதும் கவலையடைகின்றோம்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் இலங்கையின் நிலைவரங்கள் தொடர்பில் மிகநெருக்கமான கண்காணிப்புக்களை மேற்கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தை வலியுறுத்துகின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.