சத்தமில்லாத யுத்தம் மூலம் இலங்கையை ஆக்கிரமிக்கும் சீனா

சீனாவின் ஆக்கிரமிப்பு வலையத்தினுள் இலங்கை சிக்கி அதிலிருந்த மீளமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றது. சத்தமில்லாத மிகப்பெரிய யுத்தம் ஒன்றின் மூலம் இலங்கையை சீனா முழுமையாகக் கைப்பற்றி எதிர்காலத்தில் எங்களுக்கு சொந்தமான நாடு சீனாவிடம் சிக்கி நாங்கள் இந்த உலகத்தில் ஏதிலிகளாகத் தவிக்கின்ற ஒரு நிலைமையே இங்கு ஏற்படப்போகின்றது என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.இளங்கதிர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சீன செயற்திட்டங்கள் தொடர்பில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தென்னாசியாவில் தனது ஆதிக்கத்தை நிறுவிக்கொள்ள நினைக்கும் சீனா அதற்காக இலங்கையில் சத்தமில்லாத யுத்தம் ஒன்றை ஆரம்பித்து தற்போது தமிழர் தாயத்தையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது.

இதன் ஆரம்பமாக தென்னிலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட ஆக்கிரமிப்பு வடிவமாக இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி என்ற பெயரில் பணத்தைக் கொடுத்து இலங்கைக்கு சொந்தமான கடல் பரப்பைக் கைப்பற்றி தனது வல்லாதிக்க சக்தியை நிலை நாட்டி நிற்கிறது.

இதன் தொடர்ச்சியாக வடமாகணத்திலும் தீவகத்தை கைப்பற்ற பல வழிகளில் முயற்சிகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இடைநிறுத்தப்பட்ட போதும் தற்போது இரகசியமான முறையில் சீனாவுக்கு நாட்டின் வளம் மிக்க நிலப்பரப்புக்களை விற்று தற்போதைய இலங்கை ஆட்சியாளர்கள் ராஜபக்ஷ குடும்பம் தங்கள் குடும்ப அரசியல் இலாப நோக்கத்திற்காக தங்களது சொந்த நாட்டு மக்களையே ஏமாற்றி வருவதோடு, இலங்கையின் இறையாண்மையையே மதிக்காது செயற்ப்படுகின்றனர்.

அந்த வகையில் இலங்கையின் மேற்கே துறைமுக நகரம் உட்பட மிக முக்கியமான பொருளாதார மையங்கள் என இலங்கையின் நிலப்பரப்புகளை ஆக்கிரமிப்புச் செய்தது மட்டுமல்லாமல் தற்போது வடக்கில் மிகப் பெரிய அளவிலான ஆக்கிரமிப்பினை ஆரம்பித்துள்ளது. அன்பான எமது மக்கள் மிகத் தெளிவாக ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.

வடமாகாணத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு பல வடிவங்களில் வருகின்றது. தற்போது காங்கேசன்துறை பகுதியில் முன்னாள் ஜனாதியும், தற்போதைய பிரதமருமான மகிந்த ராஜபக்ஷவினால் அமைக்கப்பட்ட சுற்றுலா விடுதிக்கான கட்டடத் தொகுதியைச் சீனாவிற்கு விற்கும் இரகசியத் திட்டம் போடப்பட்டுள்ளமை தொடர்பான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

தற்போது நாட்டில் ஏற்படடுள்ள கோவிட் என்ற கொடிய நோயின் காரணமாக நாடே முடக்கப்பட்டுள்ள நிலையில் மக்களோ, ஏனைய அரசியல் பிரதிநிதிகளோ பெரிய அளவில் வெளியில் இறங்கி வேலை செய்ய முடியாத சூழலைப் பயன்படுத்தி இந்த அரசாங்கம் இரகசியமாக தங்களது அரசியலை நகர்த்தி வருகின்றது.

மாகாண சபைகள் இல்லாமையினாலேயே இவ்வாறான செயற்பாடுகளில் அரசாங்கம் தன்னிச்சையாகச் செயற்பட முடிகின்றது. மாகாணசபை இருப்பின் அரசாங்கத்தால் நேரடியாக இவ்வாறான முடிவுகளை எடுத்துச் செயற்பட முடியாது.

மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை இல்லாதொழித்து மாகாண சபைத் தேர்தலையும் நடத்தாது நாட்டின் ஜனநாயத்தைக் குழி தோண்டிப் புதைத்து விட்டு நாட்டை ஒரு சர்வாதிகார ஆட்சி முறையில் நடாத்தி வருகின்றது.

இந்திய அரசாங்கத்தால் தமிழ் மக்களின் நன்மை கருதி கொண்டு வரப்பட்ட 13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் மாகாணங்களை ஆட்சி செய்யும் அதிகாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதனையும் இல்லாமல் ஒழிப்பதற்கான செயற்திட்டங்களையும் இந்த அரசு தென்னிலங்கையில் வைத்துத் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றது.

எமது விடுதலைப் போராட்டத்தில் தலைவர்களின் அன்றைய தீர்க்கதரிசன வார்த்தைகள் இன்று நிரூபனமாகிக் கொண்டு வருகின்றன. எதிர்காலத்தில் சீன ஆதிக்கம் இலங்கையில் தோன்றும், அதுவே சிங்கள மக்கள் மத்தியில் ஒரு எழுச்சியைத் தோற்றுவிக்கும் என்று அவர்கள் அன்று கூறிய வார்த்தைகளை இன்று நாங்கள் நேரடியாகப் பார்க்கக் கூடியதாக இருக்கின்றன.

இன்று சிங்கள மக்கள் இந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக மிகப் பெரிய அளவில் கிளர்ந்தெழுந்துள்ளார்கள். அந்த மக்களின் எதிர்ப்புகளை முறியடிக்க முடியாமல் நாட்டை முடக்கி வைத்துள்ள சூழலைப் பயன்படுத்துகின்றது இந்த அரசு.

இந்த முடக்கம் மூலம் மக்களை அடக்கிக்கொண்டு தங்கள் அரசுக்கு எதிரான செயற்பாடுகள் இந்த நாட்டில் இல்லை என்பதை இந்த உலகத்திற்குக் காட்ட முற்படுகின்றனர். இது தொடர்பில் நாங்கள் எங்கள் தமிழ் மக்களுக்கு ஒன்றை மிகத் தெளிவாகச் சொல்லிக் கொள்ளுகின்றோம்.

எமது இனம், மொழி, கலை, கலாச்சாரம் என்ற ரீதியில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் எமது தாயகப் பகுதிகளில் சீனாவின் வருகை எதிர்காலத்தில் எங்களுக்குப் பாரிய ஆபத்தையே தோற்றுவிக்கும்.

ஏனெனில் எமது பாட்டன் பூட்டன் காலத்தில் இருந்து வரலாற்று ரீதியாக நாங்கள் இணைந்து எமது கலாச்சாரத்தின் அடிப்படையில் சேர்ந்து செயற்பட்ட தேசம் இந்தியா. எமது அயல் நாடான இந்தியாவிற்கு சவால் விடும் நோக்கமாகவே சீனா இலங்கையை ஆக்கிரமித்து வருகின்றது.

எனவே இந்தியாவின் உறவுமுறையை நாங்கள் பலப்படுத்திக்கொண்டு சீனாவினை எமது மண்ணில் இருந்து விரட்டும் மிகப் பெரிய வேலை எங்கள் கரங்களில் உள்ளன. அதனை நாங்கள் நிச்சயமாகச் செய்ய வேண்டும்.

எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியாக எங்களை நாங்களே ஆளக் கூடிய ஒரு சுயநிர்ணய உரிமையை நாங்கள் பெற்றெடுப்பதற்கு எமக்கு உதவக்கூடிய ஒரே ஒரு நாடு இந்தியா மாத்திரமே.

இந்தியாவிற்குச் சவால் விடக்கூடிய வகையில் சீன அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதற்கு இலங்கையும் சார்பாக நடந்து கொண்டிருக்கின்றது. சீனாவின் ஆக்கிரமிப்பு வலையத்தினுள் இலங்கையும் சிக்கி அதிலிருந்து மீளமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றது.

இலங்கையின் மிக வளம் மிக்க பகுதியான துறைமுக நகரம் அமைந்துள்ள கடற்பரப்பினை சீனா முழுமையாகக் கைப்பற்றி ஆக்கிரமித்து தனது வல்லாதிக்க சக்தியை இங்கு திணித்துள்ளது. அதற்கு அடுத்த கட்டமாக எமது தீவகங்களைக்; கைப்பற்றும் மிகப் பெரிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு சீனா இலங்கைக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.

அதேபோல் காங்கேசன்துறை, சாவகச்சேரி மற்றும் யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களைக் கைப்பற்றுவதற்குரிய முயற்சிகளையும் தற்போது மேற்கொண்டு வருவதாக அறியக்கிடைத்துள்ளது.

உண்மையில் சத்தமில்லாத மிகப் பெரிய யுத்தம் ஒன்றின் மூலம் இலங்கையை சீனா முழுமையாகக் கைப்பற்றி எதிர்காலத்தில் எங்களுக்குச் சொந்தமான நாடு சீனாவிடம் சிக்கி நாங்கள் இந்த உலகத்தில் ஏதிலிகளாகத் தவிக்கின்ற ஒரு நிலைமை இங்கு ஏற்படும். இதனை எமது மக்கள் மிக தெளிவாகப் புரிந்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.