பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிந்து சென்ற பின்னர் பிரித்தானியாவிற்கும் பிரான்சிற்கும் இடையிலான மீன்பிடி தொடர்பான மோதல் அதிகரித்து வருவதை பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இத்தாலியில் இடம்பெற்றுவரும் ஜி 20 மாநாட்டின் பின்னணியில் ஒத்துக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய மீன்பிடிப் படகு ஒன்றை பிரான்ஸ் தடுத்து வைத்த நிலையில், இரு நாடுகளுக்கிடையிலான உறவில் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டு, இருதரப்பும் ஏட்டிக்குப்போட்டியான நகர்வுகளை எடுக்கத்தயாரகும் நிலையில் பொறிஸ் ஜோன்சன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கிலக் கால்வாயை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட பிரித்தானிய படகினை பிரான்ஸ் தடுத்து வைத்த நிலையில் இரு நாடுகளுக்கிடையிலான உறவில் கொந்தளிப்பு ஏற்பட்டு மீன்பிடி தொடர்பான பிரச்சினை அதிகரித்து வருகின்றது.
பிரக்ஸிற்குப் பின்னர், ஜெர்சி தீவை மையப்படுத்திய கடற்பரப்பில் பிரான்ஸ் மீன்பிடி படகுகளுக்கான மீன்பிடி அனுமதிப் பத்திரங்கள் பிரித்தானியாவில் மறுக்கப்பட்ட நிலையில் பிரித்தானிய மீன்பிடி படகுகளுக்கு பிரான்ஸ் துறைமுகங்கள் மறுக்கப்படும் என பிரான்ஸ் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்புக் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து பிரித்தானியாவின் அண்மைக்கால நகர்வுகள் அதன் முழுமையான நம்பகத்தன்மை மீது கேள்வியை ஏற்படுத்தியுள்ளதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் தெரிவித்திருந்திருந்தார்.
இந்த நிலையிலேயே இரு நாடுகளும் ஒற்றுமைப்பட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
மேலும் மீன்பிடிக்கான அனுமதிப் பத்திரங்களை பிரான்ஸிற்கு வழங்குவதற்கு பிரதமர் அலுவலகம் எதிர்பார்த்திருப்பதாகவும், பிரான்ஸ் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ளுமாயின் அவ்வாறான நிலையில் தாமும் செயற்படத் தயங்கப் போதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று ரோமில் ஜி 20 மாநாட்டின் முடிவில் பிரித்தானிய பிரதமரும், பிரான்ஸ் அதிபரும் சந்திப்பு ஒன்றை நடத்துவார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.