இலங்கையில் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள மக்களுக்கான நிவாரணத்தை உறுதி செய்யவேண்டும். மீளெழுச்சி திட்டங்கள் தொடர்பான பேச்சுக்களின்போது சமூகப் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மனித உரிமைகள் பேரவையின் 50 ஆவது அமர்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
சில உலக நாடுகளில் பொருளாதார மற்றும் பிற நெருக்கடிகள் காரணமாக மனித உரிமைகள் மீதான கவலைக்குரிய விளைவுகளை நாங்கள் எதிர்கொள்கின்றோம்.
இலங்கையில் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள மக்களுக்கான நிவாரணத்தை வழங்கி உதவி செய்யுமாறும், மீள்எழுச்சி திட்டங்கள் தொடர்பான பேச்சுக்களின்போது சமூகப் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குமாறும் நான் இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றேன்.
நிர்வாகத்தில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும் ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்கும் அனைத்து சமூகங்களுக்கும் நல்லிணக்கம், நீதியை முன்னெடுப்பதற்கும் ஆழமான கட்டமைப்பு சீர்த்திருத்தங்களில் கவனம் செலுத்தவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.