பாராளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, சரத் வீரசேகர ஆகியோர் ஒரு கூட்டணியாக இணைந்து இனவாதத்தை பரப்பி இந்த நாட்டை மீண்டும் இனவாதத்திற்குள் தள்ள முயற்சிக்கிறார்கள். சரத் வீரசேகர ஒரு முழுமையான மனநோயாளி இவர் பாராளுமன்றத்தில் இருந்து மாத்திரமல்ல, இலங்கை அரசியலில் இருந்தும் முழுமையாக புறக்கணிக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
புற முதுகில் குத்தும் பழக்கம் சிங்களவர்களுக்கு இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டார். அவருக்கு பல விடயங்களை நினைவுப்படுத்த விரும்புகிறேன். தமிழர்கள் நன்றி மறந்தவர்களும் அல்ல துரோகமிழைத்தவர்களுமில்லை.
காலனித்துவ ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற தமிழர்களின் தேவை அத்தியாவசியமானதாக காணப்பட்டது. சேர் .பொன் இராமநாதன், சேர்.அருணாச்சலம் ஆகியோர் நாட்டின் சுதந்திரத்துக்கு முன்னிலை வகித்தார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.
சுதந்திரத்துக்கு தமிழர்கள் தேவைப்பட்டார்கள். ஆனால் சுதந்திரத்துக்கு பின்னரான காலப்பகுதியில் தமிழர்கள் பல அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். 1957 ஆம் ஆண்டு தனிச் சிங்கள சட்டத்தை அறிமுகப்படுத்தி இந்த நாட்டை பாரிய இன வன்முறைக்குள் தள்ளியது சிங்கள அரச தலைவர்கள் என்பதை எவரும் மறக்க முடியாது.
தனி சிங்கள சட்டத்தை தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வாக தந்தை செல்வாவுடன் அப்போதைய பிரதமர் பண்டாரநாயக்க ஒப்பந்தம் கைச்சாத்திட்டார். பண்டா – செல்வா ஒப்பந்தத்துக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன கொழும்பில் இருந்து கண்டிக்கு பௌத்த தேரர்களுடன் எதிப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
சுதந்திரத்துக்கு பின்னரான காலப்பகுதியில் தமிழர்கள் பல கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். படுகொலை செய்யப்பட்டார்கள். சொந்த நாட்டில் தமிழர்களை படுகொலை செய்து அவர்களை அகதிகளாக்கிய பெருமை சிங்கள பெரும்பான்மை அரச தலைவர்களையே சாரும் என்பதையும் மறந்து விடக் கூடாது.
தமிழர்கள் ஒருபோதும் ஆயுத போராட்டத்தை விரும்பவில்லை. அஹிம்சை வழியில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போராடினார்கள். அரச தலைவர்களுடன் போராடினார்கள். ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டார்கள்.ஆனால் அஹிம்சை வழி போராட்டத்தை சிங்கள தலைவர்களே ஆயுதப் போராட்டமாக மாற்றியமைத்தார்கள். இதன் காரணமாகவே ஆயுத போராட்டம் தலைத்தூக்கியது.
2009 ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டதை தொடர்ந்து பிறிதொரு நிகழ்ச்சி நிரல் ஊடாக இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை உறுதிப்படுத்த முயற்சிக்கின்றீர்கள். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிங்கள பௌத்த மயமாக்களுக்கான நடவடிக்கைகள் பலவந்தமான முறையில் முன்னெடுக்கப்படுகிறது. இந்து ஆலயங்கள் அழிக்கப்படுகிறது, அதன் மீது விகாரைகள் அமைக்கப்படுகிறது.
குருந்தூர் மலையில் சிங்கள பௌத்தர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு எவ்வித சான்றும் இல்லை என வடக்கு மற்றும் கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தெற்கில் இருந்துக் கொண்டு குருந்தூர் மலை பௌத்தர்களுடையது என்று குறிப்பிடுகின்றீர்கள். விடுதலை புலிகள் காலத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து பௌத்த விகாரைகள் அழிக்கப்படவில்லை, பாதுகாக்கப்பட்டது.
தெற்கில் இனவாதத்தை பரப்பி விடுகின்றீர்கள். கொழும்பில் வாழும் தமிழ் எம்.பி.க்களின் வீடுகளை முற்றுகையிடுவதாக குறிப்பிட்டு இனவாதத்தை தோற்றுவிக்கிறார். பாராளுமன்ற உறுப்பினர்கள் உதய கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் சரத் வீரசேகர ஆகியோர் ஒரு கூட்டணியாக இணைந்து இனவாதத்தை பரப்பி இந்த நாட்டை இனவாத தீக்குள் தள்ளுகிறார்கள்.
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியை மனநோயாளி என்று சரத் வீரசேகர குறிப்பிடுகிறார். உண்மையில் இவர் தான் ஒட்டுமொத்த மனநோயாளி இவரை போன்றவர்கள் பாராளுமன்றத்தில் இருந்து மாத்திரமல்ல, இலங்கை அரசியலிலும் இருந்து நீக்கப்பட வேண்டும் என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்றார்.