பயங்கரவாதத்தடைச்சட்டத்தைவிட மிகமோசமான முறையில் தமது பிரஜைகளின் மனித உரிமைகளை மீறத்தக்கதோர் சட்டமூலத்தினை இலங்கை அரசாங்கம் கூர்மதியின்றி முன்மொழிந்திருக்கின்றது.
எனவே அச்சட்டமூலத்தை உடனடியாக வாபஸ்பெறும் அதேவேளை, பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பிரயோகத்தை உடனடியாக இடைநிறுத்துமாறும் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக அதனை நீக்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தும்படி 450 க்கும் மேற்பட்ட கல்வியியலாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் இலங்கையிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை வாபஸ் பெறும்படி அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்குமாறு வலியுறுத்தி சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், மதகுருமார்கள், சிவில் சமூகப்பிரதிநிதிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கவாதிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச்சார்ந்த 450 க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு, இலங்கையிலுள்ள வெளிநாட்டுத்தூதரகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் கடந்த மார்ச்மாத இறுதியில் அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
இச்சட்டமூலம் இம்மாத இறுதியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. மிகமோசமான பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் கொண்டுவரப்படுகின்ற பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமானது இலங்கையின் ஜனநாயகத்துக்குப் பாரதூரமான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதைத் திட்டவட்டமாகக் குறிப்பிடுகின்றோம்.
அதன்படி இப்பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தை வாபஸ் பெறுமாறும், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை உடனடியாக நீக்குமாறும் நாம் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்திவரும் நிலையில், இம்முயற்சிக்கு உதவுமாறு உங்களிடம் கோருகின்றோம்.
பயங்கரவாதத்தடைச்சட்டத்தைவிட மிகமோசமான முறையில் தமது பிரஜைகளின் மனித உரிமைகளை மீறத்தக்கதோர் சட்டமூலத்தினை இலங்கை அரசாங்கம் கூர்மதியின்றி முன்மொழிந்திருக்கின்றது.
இப்புதிய சட்டமூலமானது பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளைத் தக்கவைத்திருப்பதுடன், அதனை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.
இது ஜனநாயகத்தில் பொதுமக்களின் முனைப்பான பங்கேற்புக்கான இடைவெளியைச் சுருக்குவதுடன், சமுதாயங்களை அரசின் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தி, அரசை இராணுவமயப்படுத்தும்.
ஆகவே பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்வதற்கான கடப்பாடுகளை, பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் போன்ற பிறிதொரு மிகமோசமான சட்டத்தைத் திருட்டுத்தனமாக அறிமுகப்படுத்துவதற்காகப் பயன்படுத்தமுடியாது.
கடந்த 2018 ஆம் ஆண்டு பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்வதற்கும், கடந்த 2022 ஆம் ஆண்டு அச்சட்டத்தை மறுசீரமைப்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான அழுத்தங்களைச் சமாளிக்கும் நோக்கிலான ‘ஏமாற்று’ நடவடிக்கைகளே தவிர, அவை மனித உரிமை மீறல்களுக்குத் தீர்வுகாணும் உண்மையான நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டவையல்ல.
பயங்கரவாதத்தடைச்சட்டம் கட்டாயமாக நீக்கப்படவேண்டும் என்பதும், அது அதிவிசேட நிறைவேற்றதிகாரங்களைக்கொண்ட எந்தவொரு சட்டவாக்கத்தினைக்கொண்டும் பதிலீடு செய்யப்படக்கூடாது என்பதும் எமது தெளிவானதும், தொடர்ச்சியானதுமான நிலைப்பாடாகும்.
எனவே இவற்றைக் கருத்திற்கொண்டு உங்களது செல்வாக்கின் ஊடாகவும், இலங்கை அரசாங்கத்துடன் நீங்கள் பேணிவரும் இராஜதந்திர, அரசியல் மற்றும் பொருளாதார நல்லுறவைப் பயன்படுத்தியும் அனைத்து இலங்கையர்களுக்குமான மனித உரிமைகளையும், சட்டத்தின் ஆட்சியையும், ஜனநாயகத்தையும் மேம்படுத்திப் பாதுகாக்கின்ற முதன்மை நிலைப்பாட்டை நீங்கள் மேற்கொள்ளவேண்டுமென நாம் வலியுறுத்துகின்றோம்.
பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தின் முழுமையான உள்ளடக்கம், அதன் தொனி மற்றும் உண்மையான நோக்கம் என்பன இச்சட்ட மறுசீரமைப்பை அர்த்தமற்றதாக்குவதுடன், இது பயங்கரவாதத்தடைச்சட்ட மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை கொண்டிருக்கும் கடப்பாடு முழுமையாக வலுவிழக்கச்செய்கின்றது.
அதேபோன்று கடந்த மாதம் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை உடனடியாக வாபஸ் பெறல், பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பிரயோகத்தை உடனடியாக இடைநிறுத்தல் மற்றும் சர்வதேச சட்டநியமங்களுக்கு அமைவாக அதனை நீக்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தல், தண்டனைச்சட்டக்கோவையில் உள்ளடக்கப்பட்டுள்ள பயங்கரவாதம் தொடர்பான குற்றங்கள் உள்ளடங்கலாகப் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய சட்டவாக்கத்தை விரிவாகப் பரிசீலித்தல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துமாறு நீங்கள் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தவேண்டும் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.