தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள், மனித உரிமை மீறல் மற்றும் அட்டூழிய குற்றங்களுக்கான நீதியைக் கோரி இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன் பாரப்படுத்துமாறு மனித உரிமைப் பேரவையின் பிரதான அங்கத்துவ நாடுகளுக்கும் மனித உரிமை உயர்ஸ்தானிகருக்கும் ஐநா பாதுகாப்புச் சபையை தூண்டுமாறு கையெழுத்திட்ட கோரிக்கையை அனுப்பி வைத்துள்ளோம் என ரெலோ அமைப்பின் தேசிய அமைப்பாளர் குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது இன்று நேற்றல்ல, எமது தொடர்ச்சியான நிலைப்பாடு. சர்வதேச நீதிப் பொறிமுறை, சர்வதேச விசாரணை என்பவற்றிற்கு குறைவான எந்த விடயங்களும் தமிழ் மக்களுக்கு தீர்வைத் தராது என்பதில் நாம் தொடர்ந்தும் உறுதியாக இருப்பதோடு மாத்திரமல்ல அதற்காக அர்ப்பணிப்போடு உழைத்து வருகிறோம் என்பதை அனைத்து தமிழ் மக்களும் நன்கு அறிவர் எனவும் அவர் கூறினார்.
உறுதியுடனான தொடர் பயணம்
அதேபோன்று ஐநா விடயங்களில் மாத்திரமல்லாமல் அன்றாட விடயங்களிலும் தமிழ் மக்கள் எதிர்கொண்டிருக்கும் அவசர அவசியமான பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் நாங்கள் அக்கறையோடும் செயலாற்றுவோம்.
பத்திரிகை அறிக்கைகளைத் தாண்டி மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வைப் பெற செயல் வடிவம் கொடுப்பதே அர்த்தமுள்ளதாக அமையும் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டவர்கள்.
தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்காக பல வழிகளிலும் போராடி வரும் வரலாற்றைக் கொண்ட எமது கட்சி தொடர்ந்தும் உறுதியுடன் பயணிக்கும் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.