சவாலான காலங்களில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் பங்காளியாக இருக்கும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழு உறுதியளித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள் இலங்கை ஜனாதிபதியுடன் ஆக்கபூர்வமான சந்திப்பொன்றை நடத்தியதாக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக கருத்துச் சுதந்திரம் மற்றும் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தும் உரிமைக்கு மேலாக சிவில் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
“இலங்கையை மீண்டும் அப்பாதையில் கொண்டு வருவதற்கு வெளிநாட்டு விவகாரங்களில் கூட்டு மற்றும் உள்ளடக்கிய நடவடிக்கை தேவை என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்” எனத் தூதுவர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்வரும் 3 முக்கிய செயன்முறைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் ஜனாதிபதியை ஊக்குவிப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
1.ஜீஎஸ்பி +
2.சர்வதேச நாணய நிதியம்
3.மனித உரிமைகள் பேரவை
இந்தச் செயன்முறைகளை வெற்றியடையச் செய்வதற்கு இலங்கை அரசாங்கத்தினால் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் நம்புவதாக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு மேலும் கூறியுள்ளது.