சிங்கப்பூர் ஜனாதிபதியாக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தர்மன் சண்முகரத்தினம் தெரிவு

இலங்கை தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூரின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.

முன்னாள் துணைப் பிரதமரும் ஆளும் கட்சி வேட்பாளருமான தர்மன் சண்முகரத்தினம், 66, சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் 70.4% வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெற்று, அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் சீனரல்லாதவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இவர்களது குடும்பம் 19 ஆம் நூற்றாண்டில் இருந்து, நான்கு தலைமுறைகளாக சிங்கப்பூரில் வசித்து வருகின்றனர். தர்மன் சண்முகரத்தினம் புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் நோயியல் தொடர்பான பல சர்வதேச அமைப்புகளுக்கு தலைமை தாங்கியவரும் Singapore Cancer Registry-இன் நிறுவனருமான பேராசிரியர் K.சண்முகரத்தினத்தின் மகனாவார். பேராசிரியர் K.சண்முகரத்தினம் “சிங்கப்பூரில் நோயியலின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார்.

15% மற்றும் 14% வாக்குகளைப் பெற்ற பெரும்பான்மை சீன சமூகத்தைச் சேர்ந்த மற்ற இரண்டு வேட்பாளர்களையும் தர்மன் சண்முகரத்தினம் எளிதாக தோற்கடித்துள்ளார்.

மிகவும் மதிக்கப்படும், புகழ்பெற்ற அரசியல் தலைவரான அவர், சுதந்திரம் பெற்றதில் இருந்து சிங்கப்பூரை ஆண்ட People’s Action Party (PAP) கட்சியில் இருந்து வௌியேறி, ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதற்கான தீர்மானத்தை மேற்கொண்டிருந்தார்.

பொருளாதார நிபுணரான அவர், 2003 முதல் இரண்டு தசாப்தங்களாக கேபினட் அமைச்சராகவும், நிதி அமைச்சராகவும் (2007-15) துணைப் பிரதமராகவும் (2011-19) பணியாற்றியுள்ளார்.

பலர் இவரை தற்போதைய பிரதமர் Lee Hsien Loong-இன் அரசியல் வாரிசாகக் கருதினர்.

சிங்கப்பூரில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 22 ஆம் திகதி நடைபெற்றது.

சிங்கப்பூரின் தற்போதைய ஜனாதிபதி Halimah Yacob-இன் 6 ஆண்டு பதவிக்காலம் எதிர்வரும் 13 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.