“சிங்கள – பௌத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களால் பேரணியில் கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இது சிங்கள மக்களை சீற்றமடையச் செய்யும் செயலாகும்.”
இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது
“ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கையுடன் செயற்படும் அரசு நாட்டு மக்களை சிங்களம், தமிழ், முஸ்லிம் என்று வேறுபடுத்திப் பார்க்கவில்லை.
ஆனால், தமிழ், முஸ்லிம் சமூகம் தான் நாட்டின் சட்ட திட்டங்களை மீறி, நீதிமன்ற உத்தரவுகளை மீறி போராட்டங்களை நடத்தி இன்று இரண்டு இனங்களுக்கிடையில் பிளவுகள் இருக்கின்றன என்று சர்வதேசத்துக்குப் பொய்ப்பித்தலாட்டம் ஆடுகின்றன.
இந்த நாட்டில் பிரச்சினை இருந்தால் அதனை அரசுதான் தீர்க்க வேண்டுமே தவிர சர்வதேசத்தால் அதனைத் தீர்க்க முடியாது. பேரணி ஏற்பாட்டாளர்கள் இதனைக் கவனத்தில்கொள்ள வேண்டும்” – என்றார்.