சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹனவிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று(13) மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சென்றிருந்தார்.

கடந்த வருடம் மே மாதம் 09 ஆம் திகதியும் அதன் பின்னரும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க செய்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்காகவே அஜித் ரோஹன இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

குறித்த வன்முறைகள் தொடர்பில் விசாரணை நடத்த பொலிஸ்மா அதிபரினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹனவும் அங்கம் வகிக்கின்றார்.

தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் தெரியவந்த சந்தேகநபர் தொடர்பான அறிக்கையை, எதிர்வரும் வியாழக்கிழமை ஆணைக்குழுவில் வழங்குமாறு தெரிவித்ததாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதியும் அதனை அண்மித்த நாட்களிலும் தமது சொத்துகள், வீடுகளுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 70 பேரிடம் இருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.