தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழ் அரசு கட்சியினர் வெளியேறிய பின்னரும், நாங்கள்தான் கூட்டமைப்பு, தேர்தலின் பின்னர் இணைந்து செயற்படுவோம் என கூறிக்கொண்டிருந்தது ஏன் என்பது இப்பொழுது அனைவருக்கும் புரிந்திருக்கும். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணையப்போவதைத்தான் அவர்கள் அப்படி கூறினார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன்.
உள்ளூராட்சிதேர்தலில் குத்து விளக்கு சின்னத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாக போட்டியிடும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களுடன் கந்தரோடையில் நடந்த கலந்துரையாடலில் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணசபைக்கான கடந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 11 ஆசனங்களை கைப்பற்றியிருந்த போதும், 7 ஆசனங்களை கைப்பற்றிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு முதலமைச்சர் பதவியை தாரை வார்த்துக் கொடுத்தார்கள்.
இதில் நாங்கள் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். அது வெட்கப்பட வேண்டிய விடயம். எல்லோரும் ஒரே அணியாகவே அப்போது செயற்பட்டோம். தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் ஒற்றுமையை குலைக்கக்கூடாது என்பதற்காக, எமது எதிர்ப்பை கட்சிக்குள் இயன்றவரை பிரயோகித்தோம். அந்த நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவுகள் எப்படி எடுக்கப்பட்டன என்பது உங்களிற்கு தெரியும். எங்கள் கருத்தை அப்போது அவர்கள் யாரும் செவிமடுக்கக்கூட தயாராக இல்லை.
கிழக்கு முதலமைச்சர் பதவியை தாரை வார்த்துக் கொடுத்தமைக்காக மக்களிடம் நாம் பகிரங்க மன்னிப்பு கோருகிறோம். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் ஜனநாயக பண்புகள் நீடிப்பதற்கு தடையாக இருந்த தமிழ் அரசு கட்சி தானாகவே கூட்டமைப்பை விட்டு வெளியேறிச் சென்று விட்டது. இப்பொழுது கூட்டமைப்பிற்குள் கூட்டு முடிவெடுக்கும் ஜனநாயக அம்சம் வலுப்படுத்தப்பட்டுள்ளது. அதனால், தமிழ் தேசிய கூட்டமைப்பு இனிமேல் அப்படியான தவறுகளை இழைக்கும் என யாரும் கருத வேண்டாம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழ் அரசு கட்சி வெளியேறியபோது, தொழில்நுட்ப ரீதியாக தனித்து போட்டியிட போவதாக எம்.ஆபிரகாம் சுமந்திரன் தெரிவித்தார்.
ஆனால் அதன் பின்னர் திடீரென, நாங்கள்தான் கூட்டமைப்பு, தேர்தலின் பின்னர் கூட்டமைப்பாக இணைந்து செயற்படுவோம் என்றும் தெரிவித்தார். இதையெல்லாம் பார்த்த போது, ஆபிரகாம் சுமந்திரன் வழக்கம் போல பொய் சொல்கிறார் என்றுதான் தோன்றியது.
தனிக்கட்சியொன்று எப்படி கூட்டமைப்பாகும் என்ற சந்தேகம் பலருக்குமிருந்தது. தமிழ் அரசு கட்சியை சேர்ந்த ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவும் அந்த சந்தேகத்தை பகிரங்கமாக எழுப்பியிருந்தார். தனிக்கட்சியொன்றை கூட்டமைப்பு என குறிப்பிட முடியாதென்பது சாதாரண அறிவுள்ள எல்லோருக்குமே தெரியும்.
ஆபிரகாம் சுமந்திரன் ஜனாதிபதி சட்டத்தரணி. இந்த விவகாரத்தில் அவர் பொய் சொல்லவில்லை.
நாங்கள்தான் கூட்டமைப்பு, தேர்தலின் பின் கூட்டமைப்பாக சேர்ந்து செயற்படுவோம் என அவர் சொன்னது, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணையப் போவதைத்தான் என்பது இப்பொழுது எல்லோருக்கும் புரிந்திருக்கும்.
இது திடீரென நடந்த நிகழ்ச்சியல்ல. கரைத்துறைப்பற்று பிரதேசசபையில் தமிழ் அரசு கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால், முஸ்லிம் சுயேச்சைக்குழுவின் தாராசு சின்னத்தில் போட்டியிடவில்லை. இது நீண்டகால திட்டம்.
இதே தராசு சின்னத்தில் வேட்புமனு மன்னார் நகரசபையில் நிராகரிக்கப்பட்ட போது, அதற்காக முன்னிலையானதும் சுமந்திரன்தான் என்றார்.