சீனாவின் காலனித்துவ நாடாக இலங்கை மாறிவிட்டது : சந்திரிகா ஆதங்கம்

நீண்டகாலமாக வெள்ளையர்களின் கட்டுபாட்டில் இருந்து போராடி விடுவிக்கப்பட்ட இலங்கை இன்று மீண்டும் சீனாவின் காலனித்துவ நாடாக மாறிவிட்டது.

கொரோனா வைரஸ் பரவலில் நாடே சிக்கித் தவிக்கும் வேளையில் நாட்டை முடக்காது தற்போது துறைமுக சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்காக நாட்டை முடிக்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் அவசரகால நிலையில் அரசாங்கம் முன்னெடுக்கும் நகர்வுகள் மோசமானதாகும், குறிப்பாக துறைமுக நகர் சட்டமூலத்தை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதானது மிகவும் மோசமான செயற்பாடாகவே நான் கருதுகிறேன்.

உயர் நீதிமன்றத்தில் தவறெனக் கூறியும், நாட்டு மக்கள் கூப்பாடு போட்டும் அது எதனையும் கருத்தில் கொள்ளாது துறைமுக சட்டத்தை நிறைவேற்றியுள்ளனர்.

நாட்டு மக்கள் வெளியில் இறங்க முடியாத நிலையொன்று காணப்படுகின்ற இந்த நேரத்தில், மக்கள் உயிரிழந்து கொண்டுள்ள இந்த நேரத்தில், நாட்டினை முடக்காது வேடிக்கை பார்த்தவர்கள் இப்போது சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக நாட்டினை முடக்கிவிட்டு, நீதிமன்ற வியாக்கியானத்தையும் கருத்தில் கொள்ளாது சட்டமாக்கிவிட்டனர்.

நீண்டகாலமாக வெள்ளையர்களின் கட்டுபாட்டில் இருந்து போராடி விடுவிக்கப்பட்ட இலங்கை இன்று மீண்டும் சீனாவின் காலனித்துவ நாடாக மாறிவிட்டது.

இவ்வாறான சூழ்நிலையில் பண்டாரநாயக்கவை அதிகமான நினைவுக்கு வருகின்றது, அவர் வழியில் வந்த சுதந்திர கட்சியினர் மிகப்பெரிய காட்டிக்கொடுப்பை இன்று செய்துள்ளனர்.

தனித்த பயணமொன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இல்லை, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வாலில் தொங்கிக்கொண்டு அரசியல் செய்யும் நிலைமையே உள்ளது எனவும் கூறியுள்ளார்.