இலங்கையில் உள்ள ஒருபகுதியை சீனாவுக்கு வழங்கி, அந்தப் பகுதியில் ஆட்சி செய்வதற்கு சீன அரசாங்கத்தினை இலங்கை சட்டத்தின் ஊடாக அதிகாரத்தை வழங்க முடியுமாக இருந்தால், ஏன் இந்த நாட்டின் பூர்வீக குடிகளாக வாழ்ந்து வரும் வடகிழக்கை பூர்வீகமாக கொண்ட தமிழர்களுக்கு அதிகாரத்தை வழங்க முடியாது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
கடந்த எழுபது வருட காலமாக அகிம்சை ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் தங்களுக்கான அதிகாரங்களை கேட்டுப் போராடிய இந்த நாட்டின் பூர்வீக குடிகளான வடகிழக்கு தமிழர்களை கொன்று குவித்து விட்டு இன்று இந்த நாட்டை சீனா போன்ற அன்னிய நாடுகளுக்கு துண்டு துண்டாக பிரித்து கொடுக்க தொடங்கி உள்ளனர்.
இந்த நாட்டில் உரிமை உள்ள இரு இனங்கள் தங்களுக்குள் சண்டையிட்டு ஆயிரக்கணக்கான தங்களது உயிர்களை இழந்து இன்று உணர்வு ரீதியாக இந்த நாடு இரண்டாக பிளவுபட்டு நிற்கும் நிலையில்.
இந்த நாட்டை அன்னிய நாடுகளுக்கு துண்டு துண்டாக பிரித்து கொடுப்பதை இந்த நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இரண்டு இன மக்களும் அனுமதிக்க மாட்டார்கள்.
நீங்கள் இந்த நாட்டை சீனா போன்ற அன்னிய நாடுகளுக்கு தாரைவார்த்துக் கொடுப்பதாக இருந்தால், முதலில் வடகிழக்கு தமிழர்களுக்கான தனியான அதிகாரத்தை தந்துவிட்டு நீங்கள் உங்களது பகுதிகளை அன்னிய நாடுகளுக்கு தாரைவார்த்துக் கொடுங்கள்.
இந்த நாட்டில் உள்ள மக்கள் எதிர்வரும் காலங்களில் சீன ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராட வேண்டிய நிலை ஏற்படலாம். அன்று வடகிழக்கு தமிழ் மக்களின் உதவி சிங்கள மக்களுக்கு தேவையாக இருக்கும்.
இலங்கையில் சீனாவின் காலனித்துவ நாடாக மாறும் போது தான் தமிழ் மக்கள் சிங்கள ஆட்சியாளர்களால் எவ்வாறு ஆளப்பட்டார்கள் என்பது தெரியவரும்.
கொழும்புத் துறைமுக நகரத்திற்கு கொடுக்கப்படும் அதிகாரங்களை வடகிழக்கு மாகாணங்களுக்கும் வழங்க வேண்டும்.
அத்துடன் 13+ குறித்து வாய்கிழிய கத்தும் இந்திய அரசை இன்று வரை பொருட்படுத்தாது வடகிழக்கு மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை தர மறுத்து வரும் இலங்கை அரசாங்கம் சீன அரசுக்கு தனி அதிகாரம் மிக்க கொழும்பு துறைமுக நகரையே கொடுத்துள்ளது.
இந்த செயற்பாட்டின் ஊடாக இந்திய அரசின் முகத்தில் ஓங்கி அறைந்துள்ளது இலங்கை. ஆசிய பிராந்திய நாடுகளை இராஜதந்திர ரீதியில் ஆக்கிரமித்து வரும் சீனா, தற்போது இந்து சமுத்திரத்தின் மத்தியில் கால்பதித்து நிற்கிறது.
இன்னும் சில ஆண்டுகளில் இலங்கை முழுவதையும் சீனா தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து விடும். அதன் பின்னர் இந்து சமூத்திர கடல் பாதுகாப்பு சீனாவின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும். இதற்காகவே இலங்கையில் சீனா தனது முழு வளத்தையும் குவித்து வருகிறது. சீனாவின் ஒரு மாநிலமாக இலங்கை மாறியுள்ளது.
சீன வங்கிகள் உட்பட சீன நாட்டில் சீன மக்கள் பயன்படுத்தும் அத்தனை வகையான பொருட்கள் மற்றும் அதற்கான கட்டமைப்புகள், ஆளணி வளங்கள் என அனைத்தும் இலங்கையில் குவிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் சுமார் ஒரு இலட்சம் சீனர்கள் நிரந்தரமாக இருப்பதாகவும், ஆறு இலட்சம் சீனர்கள் வருடம் ஒன்றிற்கு இலங்கைக்கு வந்து போவதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.