சீனா இலங்கைக்கு அதிக விலைக்கு தடுப்பூசியை வழங்குகின்றதா?

15 மில்லியன் Sinopharm தடுப்பூசியை கொள்வனவு செய்வதற்காக 150 மில்லியன் டொலர் ஒதுக்கீட்டிற்கு தமது நாட்டின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக, பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹசீனாவின் விசேட உதவியாளர் ஷாஹ் அலி ஃபர்ஹத் கடந்த 27 ஆம் திகதி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

பங்களாதேஷுக்கு 10 டொலர்களுக்கு வழங்கும் தடுப்பூசியை இலங்கைக்கு 15 டொலர்களுக்கு வழங்கும் சீனாவின் செயற்பாடு வியப்பளிப்பதாக பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களைப் பகிர்ந்திருந்தனர்.

இந்நிலையில், பங்களாதேஷை விட கூடுதல் விலைக்கு Sinopharm தடுப்பூசி இலங்கைக்கு வழங்கப்படுவதாக வெளியான தகவல் தொடர்பில் இலங்கைக்கான சீன தூதரகம் நேற்று பிற்பகல் ட்விட்டரில் பதிவொன்றை இட்டது.

பங்களாதேஷ் மற்றும் Sinopharm குழுமத்திற்கு இடையிலான பெறுகை உடன்படிக்கை இன்னமும் இறுதியாகவில்லை என அதில் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இத்தகைய பொய் பிரசாரங்கள் விலை தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு தடையாக அமையலாம் எனவும் அந்த பதிவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதற்கு இலங்கை பிரஜை ஒருவர், சீனா ஒ​ரே தடுப்பூசியை வெவ்வேறு நாடுகளுக்கு மாறுபட்ட விலையில் விற்பனை செய்வதற்கான காரணம் என்னவென வினவியுள்ளார்.

இது அனைத்து ஔடத உற்பத்தி நிறுவனத்திற்கும் பொதுவான காரணியாகும் என சீன தூதரகம், இலங்கை பிரஜைக்கு பதிலளித்துள்ளது.