இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தார்.
ஜனாதிபதியின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், இலங்கைக்கு மீண்டும் பயணம் செய்துள்ளமை குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர், நெருக்கமான நண்பன் என்ற அடிப்படையில் சீனா எப்போதும் இலங்கைக்கு ஆதரவளிக்கும் என தெரிவித்துள்ளார்.
கோவிட் தடுப்பூசி திட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக சீன அரசாங்கம் தொடர்ச்சியாக சினோபார்ம் தடுப்பூசியினை வழங்கியமைக்காக ஜனாதிபதி நன்றியை தெரிவித்துள்ளார்.
கொரோனாவினால் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடிக்கான தீர்வின் ஒரு பகுதியாக கடனை திருப்பி செலுத்துவதற்கான திறன் குறித்து கவனம் செலுத்தினால் அது நாட்டிற்கு பெரும் நிம்மதியாக அமையும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த சந்திப்பின் போது கேட்டுக்கொண்டுள்ளார்.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களிற்கு மலிவுவிலையில் சந்தைக் கடனை வழங்கும் முறையை பெற முடிந்தால் தடைகள் இன்றி தொழில்துறையை நடத்துவது இலகுவாகயிருக்கும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.