இந்தியாவினைப் பகைத்துக் கொள்ளும் வகையில், சீனாவின் கப்பல், பாகிஸ்தான் கப்பல் ஆகியன இலங்கையின் துறைமுகங்களை நோக்கி வருகை தருவது இலங்கையின் இராஜதந்திரத்துக்குக் கிடைத்த தோல்வியாகும் என்று முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் பத்மநாபா மன்றத்தினுடைய தலைவருமான இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு நகரிலுள்ள கிழக்கு ஊடக மன்றத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,
இன்று நாடு எதிர்நோக்குகின்ற பல விடயங்களைப் பார்க்கின்ற போது இலங்கையின் இராஜதந்திர ரீதியான நடவடிக்கைகள், கடந்த காலத்துக்குரிய செயற்பாடுகள் வெற்றியளித்திருக்கின்றதா. குறிப்பாக குறிப்பிட்ட தினங்களாக சீனவின் போர்க்கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி விரைவதும், பாகிஸ்தானுடைய கப்பல் கொழும்பு துறைமுகத்தை நோக்கி விரைவதும் இலங்கையின் இராஜதந்திரத்துக்குக்கிடைத்த தோல்வியாகும். அருகிலுள்ள இந்திய நாட்டைப் கைத்துக் கொண்டு இரண்டு நாட்டுக் கப்பல்களுக்கும் அனுமதி கொடுத்தது என்பது முதலாவது தவறான செயற்பாடாகும். இராஜதந்திர நடவடிக்கையில் அருகிலுள்ள நாட்டைப் பகைத்து ஒரு இராஜதந்திர ரீதியான செயற்பாடுகளை முடக்குவதென்பதே இந்த நாட்டுக்குக் கிடைத்த முதலாவது தோல்வியாகும்.
இன்றுள்ள சூழ்நிலையில், இந்த அரசு புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த ஜனாதிபதியைப் பொறுத்தவரையில் கடந்த காலத்தில் அம்பாந்தோட்டை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. அது மாத்திரமல்ல வடக்கு கிழக்கின் தமிழ் அரசியல் தலைவர் சம்பந்தன் ஐயா எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கால கட்டத்தில்தான் கௌரவ ரணில் விக்கிரமசிங்க இவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதனை மறந்துவிடக்கூடாது. இதனை அம்பலப்படுத்த வேண்டியப பல விடயங்கள் முடிக்கிவிடப்பட்டிருந்ததன. இந்த விவகாரத்தில் இலங்கை அரசு இனிமேலாவது இராஜதந்திர ரீதியாக இந்தியாவை பகைக்காமல், அருகிலுள்ள நாட்டைப் பகைக்காமல் செயற்பட வேண்டும்.
ஒரு நாடு ஒரு நாட்டு அரசைச் செயற்பட வைப்பதற்கு அணிசேரா செயற்பாடுகளும் அணி சேரக்கூடிய செயற்பாடுகளும் தத்துவார்த்த ரீதியாக இருக்க வேண்டும். இலங்கையைப் பொறுத்தவரையில் கடந்த காலங்களில் மிக உன்னிப்பாகச் செயற்படுத்திவந்திருந்தது. ஆனால் குறிப்பிட்ட காலமாக எடுப்பார் கைப்பிள்ளைத் தனமான வகையில் தனிப்பட்ட ரீதியில் இராஜதந்திர ரீதியான செயற்பாடுகள் முடக்கிவிடப்பட்டிருந்தன. இந்த வகையில் கடந்த குறிப்பிட்ட காலமாக நடைபெற்ற செயற்பாடுகள் இலங்கை அரசாங்கத்தைக் கண்டிக்கக்கூடிய செயற்பாடுகளாக அமைகின்றன. ஆகவெ இந்தியா விவகாரத்தில் இலங்கை அரசு சரியான அணிசேராக் கொள்கையைச் சரியாக கடைப்பிடிக்கும் பட்சத்தில் இலங்கைக்கான மேலதிக உதவிகளை இந்தியாவிலிருந்து பெறுவதற்குரிய வாய்ப்புக்கள் உருவாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வியாபார ரீதியாக இலங்கை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பொருள்க்களுக்கான விலையேற்றத்தினைக் கட்டுப்படுத்துவதற்கான செயற்பாட்டில் மாவட்ட பாவனையாளர் அதிகார சபை விலைக் கட்டுப்பாடுகளை அமுல் படுத்துகிறதா என்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. இதனை முழுமையாக அழுல் படுத்துவதற்கு அரசாங்க அதிபர் பரிபூரணமான நடவடிக்கை எடுப்பார் என்று நான் நம்புகிறேன்.
இன்றைய நிலையில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் நடைபெறுகின்ற கருத்து மோதலென்பது அந்தத் தலைமையின் பலவீனத்தைக் காட்டுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு கட்சிப் பிரதிநிதிகளின் கருத்து மோதல்களை தீர்ப்பதற்கான ஒரு களத்தை தலைமை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதை விடுத்துவிட்டு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் சரி பிழையை பொது மக்களுக்கு மத்தியில் விவாதிப்பது ஏற்புடையதல்ல. இன்றைய காலகட்டத்தில் அந்தக் கட்சியினை பலவீனத்தில் கொண்டே செல்லும் என்ற அடிப்படையில் உடனடியாக தமிழரசுக்கட்சியும், தமிழ் ஈழ விடுதலை இயக்கமும் உள்ளே எழுகின்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இன்றைய சூழ் நிலையில் நாடு எதிர்நோக்குகின்ற அரசியல் ரீதியான விடயங்களில் இலங்கை அரசாங்கம், இலங்கை அரசு செயற்படமுடியாமல் அரசியல் தலைமைகள் பின்வாங்குகின்ற நிலையில், மக்கள் வெகுஜனப் போராட்டம் மேற்கொண்டு எழுச்சி காரணமாக நாட்டில் பதவி விலகல்கள் நடைபெற்றன. வெகுஜனப் பொராட்டம் வெற்றியளித்து. தற்போது அரசு ஓரளவுக்குச் செயற்படத் தொடங்கியிருக்கிறது. இதை முன்னேற்றகரமாக கொண்டு செல்வதற்கு ஜனாதிபதி அவர்களால் இப்போது சர்வகட்சி ஆட்சி முறையினை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால், சர்வகட்சி ஆட்சி என்று கூறிக் கொண்டு குறிப்பிட்ட சில கட்சிகளுக்குள் தங்களுடைய செயற்பாடுகளை முடக்குவது ஏற்புடையதல்ல. அதே வேளையில் அனைத்துக் கட்சிகளும் சர்வகட்சி ஆட்சிமுறைக்கு பங்களிப்புச் செய்வதா இல்லையா என்பதில் சம்பிரதாயபூர்வமாக என்று கூறுகின்றவே தவிர, முழுமையாக பங்களிப்புச் செய்கின்றதா என்ற கேள்வி தொக்கி நிற்கின்றது. ஆனால் வடக்கு கிழக்கிலுள்ள கட்சிகளைப் பொறுத்தவரையில், சர்வகட்சி முறைக்குக் கீழ் ஒத்துழைக்கும் பட்சத்தில் தமிழர்களின் நலன்கள் சிலதைப் பாதுகாக்க முடியும் என்ற கருத்து சமூகத்தின் மத்தியில் காணப்படுகிறது. எனவே தமிழ் தரப்பு இதற்கு ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் தமிழர்களுடைய நலன்களைப் பாதுகாக்க முடியும்.