அரசாங்கத்துக்குள் ஏற்பட்டிருக்கின்ற முரண்பாடுகளை களைவதற்காக, எதிர்வரும் 21ஆம் திகதி புதன்கிழமையன்று முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீ லங்கா சுத்திரக்கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையிலேயே இப்பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பின்னர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனும் தனியாக, சுதந்திரக் கட்சியினர்
பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என அறியமுடிகின்றது.
ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை ஜனாதிபதி செயலகத்திலும், பிரதமருடனான பேச்சுவார்த்தை அலரிமாளிகைளிலும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன. எனினும், பிரதமருடனான பேச்சுவார்த்தைக்கு இன்னும் திகதி குறிக்கப்படவில்லை என்றும் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களை கவனத்தில் எடுக்காமல் விடுதல், அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்காக, ஒருங்கிணைப்பாளர்களை இணைத்துக் கொள்ளும் போது, சுதந்திரக் கட்சியினரை கணக்கிலெடுக்காது விடல், உள்ளிட்டவை தொடர்பில், அரசாங்கத்துக்கு எதிராக, சுதந்திரக் கட்சியினர் தொடர்ச்சியாக
குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில், சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதேவேளை, அரசாங்கத்தின் பங்காளியிலிருந்து விலகுமாறும், சுதந்திரக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள், அண்மையில் நடந்த
மத்தியக்குழுக் கூட்டத்தின் போது வலியுறுத்தியிருந்தனர்.
எனினும், நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு அவ்வாறான தீர்மானங்களை அதிரடியாக எடுக்காமல், அரசாங்கத்தின் உயர்மட்டத்தினருடன் பேச்சுவார்த்தை ஈடுபடுவதற்கே சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.அதன்பிகாரமே எதிர்வரும் 21ஆம் திகதியன்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.