பல்கலைக்கழக கட்டடைப்பை இராணுவமயமாக்க இடமளிக்க முடியாது, அதனால் அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்கும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளவேண்டும்.
இல்லாவிட்டால் சட்டமூலத்துக்கு எதிராக சிறிலங்கா சுதந்திர கட்சி வாக்களிக்கவேண்டும் என சிறிலங்கா சுதந்திரக் கட்சி இளைஞர் முன்னணியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எரிக் வீரவர்த்தன தெரிவித்தார்.
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் தொடர்பில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணியின் நிலைப்பாட்டை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று கொழும்பு மருதானையில் அமைந்திருக்கும் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசாங்கத்தின் பிரதான பங்காளி கட்சியாக சிறிலங்கா சுதந்திர கட்சி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ்வின் செளபாக்கிய வேலைத்திட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கிவருகின்றது. என்றாலும் அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்கும் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு நாங்கள் எந்தவகையிலும் ஆதரவளிக்க முடியாது. அது எமது எதிர்கால சந்ததியினருக்கு செய்யும் பாரிய அழிவாகும் என்றார்.