சுதந்திர சதுக்கத்திற்கு முன் ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆர்ப்பாட்டம்

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (03) கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் சுதந்திர சதுக்கத்திற்குள் நுழைய முயற்சித்த போதிலும் பாதுகாப்புப் படையினர் அதற்கு அனுமதிக்கவில்லை.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் ஒன்றுகூடிய அவர்கள் இன்று காலை 11 மணியளவில் நெலும் பொக்குண திரையரங்கிற்கு அருகில் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திர சதுக்கத்திற்கு பேரணியாகச் சென்றனர்.

எனினும், அவர்கள் சுதந்திர சதுக்கத்தை அடைந்ததும், அதற்கு முன் இருந்த பாதை முற்றாக மூடப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.