சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஊழியர் குற்றப்பத்திரத்தை திருத்த அனுமதி

2019ஆம் ஆண்டு வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக பொய்க் குற்றச்சாட்டை முன்வைத்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஊழியர் கனியா பனிஸ்டர் பிரான்சிஸுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை திருத்துவதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலேல்ல சட்டமா அதிபருக்கு, புதன்கிழமை (03) அனுமதி வழங்கினார்.

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி அல்லது அண்மித்த காலப்பகுதியில் கொழும்பு கறுவாத் தோட்டம் பகுதியில் வைத்து வெள்ளை வாகனத்தில் வந்த ஐவர், தன்னைக் கடத்திச் சென்று துப்பாக்கி முனையில் மிரட்டி பல மணிநேரம் தடுத்து வைத்ததாக கறுவாத் தோட்டம் பொலிஸில் முறைப்பாடு கனியா பனிஸ்டர் பதிவு செய்தார்.

எனினும், மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் பொய்யான சாட்சியங்களை சோடனை செய்ததாக கனியா பனிஸ்டர் மீது சட்டமா அதிபர் குற்றப்பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.

இலங்கை அரசை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதற்காக பொய்யான தகவல்களை வழங்கியதாகவும், தனது கடத்தல் குறித்த விடயத்தில் பொய்யான ஆதாரங்களை உருவாக்கியதாகவும் கனியா பன்னிஸ்டர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.