செயற்கை உரம் இன்மையால் மந்த நிலையில் விவசாயம் : விவசாயிகள் கவலை

விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான செயற்கை உரம் மற்றும் களை நாசினிகள் உரிய அளவு வழங்கப்படாமையினால் பயிர்களின் வளர்ச்சியில் மந்தநிலை காணப்படுவதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில்,

எங்களது விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான செயற்கை உரம், களை நாசினி மற்றும் மண்ணெண்ணெய் என்பன சீராக வழங்காமையினால் எமது விவசாயத்தினை திருப்திகரமாக முன்னெடுத்து செல்ல முடியவில்லை. செயற்கை உரங்கள் மற்றும் களை நாசினிகளின் விலைகள் தற்போது அதிகரித்து காணப்படுகிறது. அத்துடன் விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான அளவு மேற்படி பொருட்கள் வழங்கப்படுவதில்லை.

செயற்கை உரம் உரிய காலப்பகுதியிலும், உரிய அளவுத்திட்டத்திலும் கிடைக்கப்பெறாததால் பயிரின் வளர்ச்சியில் மந்தநிலை காணப்படுகிறது. தற்போது அடை மழை பொழிகின்ற காலம். திடீரென அடைமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டால் மந்த நிலை வளர்ச்சியில் உள்ள பயிர்கள் வெள்ளத்தில் அழிந்துவிடும்.

களை நாசினிகளின் விலை அதிகமாக காணப்படுவதுடன் அதற்கு தட்டுப்பாடும் நிலவுவதால் வயலில் வளர்ந்துள்ள களைகளை அழிக்க முடியவில்லை. களைகள் பயிருக்கு மேலாக வளர்ந்து காணப்படுவதால் பயிரின் வளர்ச்சியில் ஆரோக்கியம் குன்றியுள்ளது. மண்ணெண்ணெய் எமக்கு சீராக விநியோகிக்காததால் தண்ணீர் பாய்ச்சவேண்டிய வயல் நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை காணப்படுகிறது.

விவசாயிகள் அனைத்து பக்கத்திலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நாட்டின் முதுகெலும்பு விவசாயிகள் என்று கூறிக்கொண்டு விவசாயிகளுக்கு தேவையானவற்றை வழங்காமல் இருந்தால் அவர்கள் எப்படி விவசாயம் செய்வது? விவசாயிகளின் விவசாயத்தை ஊக்குவித்தால் தான் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கின்ற அரிசியையோ அல்லதே வேறு உணவுப் பொருட்களையோ இறக்குமதி செய்யாமல் நாட்டினை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல முடியும்.

எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் அதிக அக்கறை காட்டி விவசாயிகளது தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும் என்றனர்.