ஜனாதிபதியின் உரை யானை விழுங்கிய விளாம்பழம் போன்றது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (20) நடைபெற்ற, ஜனாதிபதியின் அக்கிராசன உரையின் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் ,
நாட்டின் இக்கட்டான சூழ்நிலையில் பாராளுமன்றத்தை ஒத்திவைத்து பாராளுமன்ற நடவடிக்கைகளை நிறுத்தி வைத்த ஜனாதிபதி தனது கொள்கை அறிக்கையில் ஏன் பாராளுமன்றத்தை ஒத்திவைத்தார் என்பதை தெளிவு படுத்துவார் என எதிர்பார்த்தால் அவர் தனது பழையே கதைகளையே மீண்டும் கூறி சென்றார்.
அவரின் உரை யானை விழுங்கிய விளாம்பழம் போன்றே இருந்தது.அதில் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு இல்லை.
சமையல் எரிவாயு சிலிண்டரை பெற்றுக்கொள்வதற்கான, வரிசை நீண்டுகொண்டே போகிறது. பால்மா வரிசை நகராமல் நிற்கிறது. சீமெந்தின் விலை ஆகாயத்தை தொடுகிறது. அரிசி இப்போது இருநூறு ரூபாய் இன்னும் சில மாதங்களில் 500 ரூபாவைத் தாண்டுமென கணிக்கப்படுகிறது. மரக்கறிகள் மருந்துப்பொருட்கள் என அனைத்துக்கும் தட்டுப்பாடு, விலைஉயர்வு ஏன் பலாக்காய்க்கு கூட சிறந்த விலையை இந்த அரசாங்கமே பெற்றுக்கொடுத்துள்ளது. தொடர்ச்சியான மின்சார துண்டிப்பும் செய்யப்படுகின்றது என்றார்.
இன்னும் சில நாட்களில் கையிருப்பில் உள்ள எரிபொருளும் தீர்ந்துவிட்டால் எரிபொருள் வரிசை ஒன்றையும் எதிர்பார்க்கலாம்.இப்படி நாடே அதாள பாதாளத்தில் தத்தளித்துக்கொண்டிருக்கும் போது ஜனாதிபதி சுபீட்சத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் எனத் தெரிவித்த அவர், ஜனாதிபதி கூறும் சுபீட்சம் மக்களுக்கானதல்ல அது ராஜபக்ஷ சகோதரர்களுக்கும் அவர்களை சுற்றியுள்ள ராஜ தோழர்களுக்குமான சுபீட்சமாகும் என்றார்.
இந்த பிரட்சினைகளை எல்லாம் எதிர்க்கட்சியான நாம் சுட்டிக்காட்டினால் ஜனாதிபதி கோபம் கொள்கிறார். அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் அவரின் ஆட்சியிலேயே நெல்லை 90 க்கு மேல் வாங்கியதாக கூறினார். முப்பதாயிரம் ரூபாவுக்கு யூரியா வாங்கி விவசாயம் செய்ததை அவர் மறந்துவிட்டார் என்றும் கூறினார்.
90 ரூபாய்க்கு நெல்லை விற்ற விவசாயி யாரும் அந்த பணத்தில் மாடி கட்டவில்லை நெல்லை விற்றதும் அந்த விவசாயியும், சமையல் எரிவாயு, பால்மா வரிசையிலேயே நிற்கிறான் . இதுதான் இப்போது எமது நாட்டு மக்களின் நிலை.
இதை ஜனாதிபதி புரிந்துகொள்ள வேண்டும். தமது இயலாமையை மறைக்க பலவீனமானவரே குறைகளை சுட்டி காட்டுபவர்களிடம் கோபம் கொள்வார்கள்.
ஜனாதிபதியால் இந்த இரண்டரை வருடங்களாக முடியவில்லை அவரின் செயற்பாடுகளை பார்த்தல் எஞ்சிய இரண்டரை வருடத்துக்கும் அவரால் முடியாது. அவர் மொத்தமாக பெயில் என தெரிவித்தார்.