ஜனாதிபதி ஒரு முக்கிய முடிவை எடுக்க வேண்டும் – ஜனா

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் ஒரு லட்சத்து 40ஆயிரத்துக்கு மேற்பட்ட உயிர்களைப் பலியெடுத்தவர் இன்று நாட்டின் 22 மில்லியன் மக்களையும் ஒரே சவக்குளிக்குள் கொன்று குவிக்கும் ஒரு நிலைக்குக் கொண்டுவந்திக்கின்றார். இந்த நாட்டின் நிலையைக் கருத்தில் கொண்டு அவர் ஒரு முக்கியமான முடிவை எடுக்கவேண்டும் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் தற்போதைய நாட்டின் சூழ்நிலை தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணையில் இன்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்,

தற்போது நாடு உள்ள சூழ்நிலை எல்லோருக்கும் தெரியும். இலங்கை என்பதற்குப் பதிலாக எதுவுமே இல்லாத இல்லங்கை என்று பெயர் சூட்டக்கூடிய நிலையில் நாடு இருக்கிறது. பெற்றோல் இல்லை. டீசல் இல்லை. எரிவாயு இல்லை. மின்சாரம் இல்லை. அத்தியாவசியப் பொருட்கள் எதுவுமே இல்லை. எரிபொருள் இல்லாத நிலையில் இந்த நாட்டில் எந்த வித பிரச்சினையும் இல்லாத போதும் ஊரடங்குச் சட்டம் போன்று வீதிகள் எல்லாம் வெறிச்சோடிக்கிடக்கின்றது. அதே போல் 40 வருடங்களுக்கு முன்பு பைசிக்கிளைக் கண்டவர்கள் பழைய பைசிக்கின்களைத் திருத்தி வீதிகளில் செல்கின்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதே வேளை எமது மாவட்டம் பற்றிச் சில விடயங்களைக் கூறலாம் என்று நினைக்கிறேன். உண்மையில் இலங்கையின் அரசி உற்பத்தியில் முக்கியமாக வலுச்சேர்க்கும் மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இருக்கின்றது. பிரதான தொழிலாக விவசாயமும் மீன்பிடியும் இருக்கிறது. எரிபொருள் இல்லாத காரணத்தினால் மீன்பிடியும் இல்லாமல் இருக்கின்றது. அத்துடன் மீன்பிடிக்குச் செல்பவர்கள் நாளாந்த வாழ்க்கையைக் கூடக் கொண்டு செல்ல முடியாமலிருக்கின்றது.

இலங்கையின் அரிசி உற்பத்திக்கு வலுச்சேர்க்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு லட்சம் ஏக்கரில் விவசாய செய்கின்றார்கள். வருடத்துக்கு அதில் 80 ஆயிரம் ஏக்கரில் இரு போக வேளாண்மை செய்கின்றார்கள். இப்போது சிறுபோக அறுவடை 80 ஆயிரம் ஏக்கரில் நடந்து கொண்டிருக்கிறது. வேளாண்மை வெட்டும் இயந்திரத்துக்காக ஒரு ஏக்கர் அறுவடைக்காக 15 லீற்றர் டீசல் தேவைப்படுகிறது. அந்த வேளையில் சில ஐ.ஓ.சி. எரிபொருள் நிலையங்கள் ஊடாக டீசல் கொடுக்கப்பட்டாலும், அந்த ஐ.ஓ.சி எரிபொருள் நிலைய முதலாளிமார் விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதனால் நான் அவர்களைப் பாராட்ட வேண்டும்.

இந்தப் போகத்தில் 40ஆயிரத்துக்கும் அதிக பணம் கொடுத்து யூரியா பெற்றிருக்கிறார்கள். 20ஆயிரத்துக்கு மேல் கொடுத்து களைநாசினிகளைப் பெற்றிருக்கிறார்கள். ஒரு ஏக்கருக் அவர்களுக்குரிய செலவுதானம் இரண்டு லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. இந்த நிலையில் நெல்லின் விலையை அரசாங்கம் நிர்ணயிக்கவேண்டும். நெல் சந்தைப்படுத்தும் சபை ஊடாக ஒரு மூடை நெல்லின் விலையை 10ஆயிரத்துக்கு மேல் நிர்ணயித்தால் தான் விவசாயிகள் நட்டத்திலிருந்து மீண்டுகொள்வார்கள். விவசாயிகளிடமிருந்து நெல்லை 10ஆயிரம் ரூபாவுக்கு மேல் பெற்று அரிசை மானியமாகக் கொடுக்கலாம்.

தற்போது பொலநறுவை, அனுராதபுர மாவட்டங்களில் விவசாய நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறார்கள். தற்போது விவசாய அமைச்சர் அவர்கள் 10ஆயிரம் ரூபாவுக்கு யூரியா கொடுக்கவிருப்பதாகக் கூறியிருக்கிறார். 10ஆயிரம் ரூபாவுக்கு யூரியா பெறுபவர்கள் அதிகமான லாபத்தைப் பெறுவார்கள். அனுராதபுரம் பொலநறுவை மாவட்டங்களின் அறுவடை காலத்தை வைத்தே நீங்கள் நெல்லின் விலையைத் தீர்மானிக்கின்றனர். அவ்வாறில்லாமல் தற்போதைய அறுவடைக்காலத்தில் நெல்லின் விலையைத் தீர்மானித்தால் எங்களது விவசாயிகள் பலனடைவார்கள்.

நாட்டின் இந்த நிலைமையைக் கொண்டுவந்தவர் இன்றைய ஜனாதிபதி கோட்டபாய என்பது அனைவருக்கும் தெரியும். அவர் ஜனாதிபதியாக வந்த காலத்தில் எடுத்த மடத்தனமான முடிவுகளினால் நாடு இந்த நிலைக்கு சென்றிருக்கிறது. 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் ஒரு லட்சத்து 40ஆயிரத்துக்கு மேற்பட்ட உயிர்களைப் பலியெடுத்தவர் இன்று நாட்டின் 22 மில்லியன் மக்களையும் ஒரே சவக்குளிக்குள் கொன்று குவிக்கும் ஒரு நிலைக்குக் கொண்டுவந்திக்கின்றார். அந்த நிலைமையில் அவரை ஒரு லட்சத்து 40ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆவிகள் துரத்துகின்றன. நேற்று இந்தப் பாராளுமன்றத்துக்கு வந்திருந்தார். இந்தப் பாராளுமன்றத்தில் துரத்தப்பட்டிருக்கிறார். அவருக்கு வாக்களித்த இந்த நாட்டின் 69 லட்சம் மக்களுமே அவரைத்துரத்துகிறார்கள். இந்த நாட்டின் நிலையைக் கருத்தில் கொண்டு அவர் ஒரு முக்கியமான முடிவை எடுக்கவேண்டும்.