ஜெனீவாவில் இந்தியாவின் நிலைப்பாடு எப்படி அமையும்?

கடந்த ஓராண்டு கால நடைமுறைகளைத் தொகுத்துப் பார்த்தால் இலங்கை அரசாங்கம் இந்தியா தொடர்பாக ஒரு ஸ்திரமான அணுகுமுறையைக் கொண்டுருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை நிர்மாணிக்கும் வேலைகளை இந்தியா மற்றும் ஜப்பானுடன் சேர்ந்து செய்வதற்கு இலங்கை அரசாங்கம் 2019இல் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது. ஆனால், கோட்டாபய ஆட்சிக்கு வந்தபின்னர் அது தொடர்பான முடிவுகள் தடுமாறத் தொடங்கின.

இந்தியாவின் அதானி குழுமத்திடம் அந்த முனையத்தை நிர்மாணிப்பதற்கான பணிகள் ஒப்படைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர், துறைமுக ஊழியர்கள் சங்கம் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறப்பட்டது. துறைமுக ஊழியர் தொழிற் சங்கங்களின் பின்னணியில் சீனத் தூதரகம் இருப்பதாக ஒரு தகவல் கொழும்பில் உண்டு.

இவ்வாறு, தொழிற் சங்கங்கள் எதிர்ப்பதனால் கிழக்கு முனையத்தைத் தரவில்லை. மேற்கு முனையத்தைத் தருகிறோம் என்று இலங்கை அரசாங்கம் பின்னர் கூறியது. ஆனால், அதன்பின்னர் அதையும் தரமாட்டோம் என்று கூறியது. இந்நிலையில், கடந்த ஓராண்டு காலப் பகுதிக்குள் கிழக்கு முனைய விவகாரத்தில் அரசாங்கம் உறுதியாக இல்லை என்பது மட்டும் தெரிகிறது.

அடுத்த பிரச்சினை யாழ்ப்பாணத்தில் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் கலாசார மண்டபம். இந்த மண்டபத்தை இந்தியா கட்டிக் கொடுத்தது. அதை நிர்வகிப்பதற்குரிய ஊழியர் பலமும் அதற்கு வேண்டிய தொழில் திறனும் நிதி வளமும் தன்னிடம் இல்லை என்று முன்னாள் யாழ். மாநகர சபை முதல்வர் கூறிவிட்டார். எனவே, அந்த மண்டபத்தை மத்திய அரசாங்கமே பராமரிக்கக் கூடும் என்ற ஊகங்கள் எழுந்தன.

எனினும், அது யாழ்ப்பாணத்துக்கு என்று கட்டப்பட்ட ஒரு கலாசார மண்டபம் என்பதனால் அதனை துறைசார் தமிழர்களே நிர்வகிக்க வேண்டும் என இந்தியா விரும்பியதாகத் தெரிகிறது. எனவே, அதற்குரிய ஒரு குழுவை உருவாக்கி அதற்குத் தேவைப்பட்ட ஏற்பாடுகளையும் செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திடம் இந்தியா கேட்டதாக ஒரு தகவல் உண்டு. இந்தியத் தூதுவரை சந்தித்த சம்பந்தரும் அந்த மண்டபத்தை இந்தியப் பிரதமரே வந்து திறந்து தம்மிடம் கையளிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.

ஆனால், இடையில் வந்த ஒரு செய்தியின்படி அந்த மண்டபத்தை மத்திய அரசாங்கத்தின் கலாசார அமைச்சு பொறுப்பேற்கப் போவதாக தகவல்கள் தெரிவித்தன. இதனிடையே, யாழ். மாநகரசபை முதல்வராக இருந்த ஆர்னோல்ட் பதவியிழந்தார். மணிவண்ணன் புதிய முதல்வராக வந்தார். பதவியேற்றதும் அவர் கலாசார மண்டபம் தொடர்பான ஒரு சந்திப்புக்கு கொழும்புக்குச் சென்றார். அச்சந்திப்பில், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத்தூதரும் மணிவண்ணனும் மத்திய அரசாங்கம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் பங்குபற்றினார்கள்.

கலாசார மண்டபத்தை நிர்வகிப்பதற்குத் தேவையான நிதி ஆளனி என்பவற்றோடு உரிய தொழில்சார் பயிற்சிகளை மாநகர சபைக்கு வழங்கினால் தன்னால் அதை நிர்வகிக்க முடியும் என மணிவண்ணன் உறுதியளித்துள்ளார். அருகிலிருந்த இந்தியத் துணைத்தூதுவர் அவ்வாறு ஐந்து ஆண்டுகளுக்கு யாழ். மாநகரசபைக்கு உதவி புரிய இந்தியா தயார் என்றும் உறுதி கூறியுள்ளார்.

இந்நிலையில், அங்கே பிரசன்னமாகியிருந்த மத்திய அரசாங்கத்தின் அதிகாரி ஒருவர், மணிவண்ணனைப் பார்த்து நீங்கள் இந்தியாவை நம்பக்கூடாது. அரசாங்கத்தை நம்பவேண்டும் என்ற தொனிப்படக் கருத்துக் கூறியுள்ளார்.

மண்டபம் திறக்கப்படும் நிகழ்வை பிரம்மாண்டமாக ஒழுங்கு செய்யவிருப்பதாகவும் அதில், இசையமைப்பாளர் ரஹ்மான் தன்னுடைய இசைக் குழுவோடு பங்குபற்றுவார் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், கலாசார மண்டபத்தைப் படைத் தரப்பிடம் ஒப்படைக்கப் போவதாக கடந்த வாரம் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இத்தகவல்கள் வெளியாகிய சில நாட்களில் தமிழ் நாட்டுக்கு விஜயம் செய்த இந்தியப் பிரதமர் ஆற்றிய தனது உரையில் கலாசார மண்டபத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம், கடந்த செவ்வாய்க்கிழமை யாழ். மாநகரசபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது. இதன்படி, கலாசார மண்டபத்தை மாநகர சபையே நிர்வகிக்கப்போவதாக அறவித்துள்ளது.

அடுத்த விடயம் பலாலி விமான நிலையம். ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் அவசர அவசரமாக அது திறக்கப்பட்டது. அரசாங்கம் மாறினால் அதைத் திறப்பது கடினமாக இருக்கலாம் என்று கருதியே அவ்வாறு அது அவசரமாகத் திறக்கப்பட்டது. ஆனால், கொவிட்-19 சூழலைக் காட்டி அது மூடப்பட்டது. இன்றுவரை திறக்கப்படவில்லை. அரசாங்கம் அதைத் திறக்குமா, இல்லையா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

அடுத்த விடயம் காங்கேசன்துறையில் இருந்து காரைக்காலுக்கு கப்பல் சேவை. மறவன்புலவு சச்சிதாநந்தனின் கற்பனையாகவே அது இன்று வரை காணப்படுகிறது. அவ்வாறு பயணிகள் சேவையை தொடங்குவதற்குத் தேவையான பெரிய பயணிகள் கப்பல் இலங்கையிடமும் கிடையாது இந்தியாவிடம் கிடையாது. அதை வேறு நாட்டிடமிருந்து வாடகைக்குப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்திய அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அவ்வப்போது கருத்துக் கூறிவருகிறார்கள். ஆனால், நடைமுறையில் கப்பல் ஓடவில்லை.

இதைப் போன்ற மற்றொரு விடயம், மன்னாரில் பியர் துறைமுகத்திலிருந்து இந்தியாவுக்கு போவதற்குரிய ஒரு பயணிகள் கப்பல் சேவை. இதுவும் இந்தியாவின் விருப்பத் திட்டங்களில் ஒன்றாக உள்ளதே தவிர நடைமுறையாகவில்லை.

இதில் ஆகப் பிந்திய விடயம் யாழ்ப்பாணத்தின் தீவுகளில் காற்றாலை மின் உற்பத்திக்காக சீன நிறுவனம் ஒன்றுக்கு இடங்கள் வழங்கப்படும் என்று அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தமையாகும். அதற்கு வேண்டிய அமைச்சரவை ஒப்புதலும் பெறப்பட்டது. ஆனால், சில தினங்களுக்கு முன்பு கிடைத்த செய்திகளின்படி அத்திட்டத்தை இந்தியாவிடம் கையளிக்கப் போவதாக கூறப்படுகிறது. அதற்கு வேண்டிய 12 மில்லியன் டொலர் பணத்தை இந்தியா இலங்கைக்கு உதவியாக வழங்கும் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில அத்திட்டத்தை சீனாவுக்கு வழங்கும் முடிவில் மாற்றமில்லை என சில நாட்களுக்கு முன்னர் கூறியுள்ளார்.

இவ்வாறான, ஒரு பின்னணியில்தான் அண்மையில் நடந்துமுடிந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணியை சிலர் இந்தியாவின் ஏற்பாடு என்றும் கூறிவருகிறார்கள். இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அது புலம்பெயர் தமிழர்களின் ஏற்பாடு என்று கூறுகிறார். ஆனால், அரசாங்கத்தின் கிழக்குக்கான முகவரான பிள்ளையான் அணியைச் சேர்ந்த அரங்கம் பத்திரிகை அந்தப் பேரணி இந்தியாவின் ஏற்பாடு என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறது.

இந்தியாவின் ஏற்பாடு என்றபடியால்தான் பொலிஸாரும் அரச படைகளும் பேரணியைத் தடுக்கவில்லை என்றும் அக்கட்டுரை ஒரு தர்க்கத்தை முன்வைக்கின்றது. கிழக்கு முனையம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எதிர்த்து அரசாங்கத்துக்கு அழுத்தத்தை பிரயோகிக்கும் ஒரு உத்தியாக மேற்படி பேரணியின் பின்னணியில் இந்தியாவே நின்றதாக அரங்கம் பத்திரிகை கூறுகிறது.

எனவே, மேற்கண்ட அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. இலங்கை அரசாங்கம் இந்தியா முதலில் என்று தனது வெளியுறவுக் கொள்கையைப் பிரகடனப்படுத்திய பின்னரும்கூட நடைமுறையில் நிலைமைகள் அவ்வாறு இல்லை. சீனாவை நோக்கிப் போவது போல அல்லது இந்தியாவிடமிருந்து விலகிச் செல்வது போல அல்லது இந்தியாவுக்குப் பாதகமான கேந்திர முக்கியத்துவம் மிக்க சில நடவடிக்கைகளை எடுப்பது போல ஒரு தோற்றத்தைக் காட்டி அதன்மூலம் அரசாங்கம் தன்னுடைய பேரத்தை அதிகப்படுத்தி வருகிறதா என்ற கேள்வி இங்கு முக்கியமானது.

இதன் விளைவாகத்தான் கடந்த கிழமை தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்த இந்திய பிரதமர், ஈழத் தமிழர்கள் தொடர்பாகப் பேச வேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டதா? அது போலவே இந்திய அமைச்சர் ஒருவர் பாரதிய ஜனதாக் கட்சியை இலங்கைக்கும் விஸ்தரிக்கப் போவதாகக் கூறியதை மறவன்புலவு சச்சிதானந்தன் ஆமோத்தித்துள்ளார் என்பதும் எதைக் காட்டுகிறது? இலங்கை மீதான இந்திய அழுத்தப் பிரயோக உத்தியின் பிந்திய வடிவமா இது?

ஆயின், நடக்கவிருக்கும் ஜெனீவா கூட்டத் தொடரில் இந்தியாவின் நிலைப்பாடு எவ்வாறு அமையும்? இது தொடர்பாக அரசாங்கம் இந்தியாவுக்கு அனுப்பிய கடிதத்துக்கு இந்தியா இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் பதிலளித்திருக்கவில்லை.

இந்தியாவின் நிலைப்பாடு எப்படியும் அமையலாம். இந்தியப் பேரரசு தனது நலன்களின் நோக்கு நிலையிலிருந்தே அதை முடிவெடுக்கும். ஆனால், ஈழத் தமிழர்கள் தமது நலன்களின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதற்கு வேண்டிய தயாரிப்புக்களுடன் காணப்படுகிறார்களா என்பதே இங்குள்ள முக்கியமான கேள்வியாகும்.

இந்தியா – சீனா என்ற இரண்டு துருவ இழுவிசைகளுக்கும் இடையே சுழித்தோடி அரசாங்கம் தனது பேரத்தை அதிகப்படுத்திவரும் ஒரு பின்னணியிலும் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த அடுத்த ஐ.நா. தீர்மானத்தின் முதல் வரைபானது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையிலிருந்து பாரதூரமான விதங்களில் வேறுபட்டிருக்கும் ஒரு சூழலிலும் தமிழ் மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்