ஜெனீவாவில் இலங்கை குறித்த பிரேரணை இன்று பலப்பரீட்சை!

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணை இன்று(22) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

பெரும்பாலும் பிரேரணை மீதான வாக்கெடுப்பும் இன்றைய தினமே நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு எனும் தலைப்பிலான குறித்த யோசனை, பிரித்தானியா, ஜேர்மனி, கனடா, வடக்கு மெஸிடோ னியா, மொன்டினீக்ரோ மற்றும் மலாவி ஆகிய நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ளது.

விவாதத்தின் இடைநடுவே சில நாடுகள் தலையீடும் செய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் பிரேரணை மீதான வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை வரை பிற்போடப்படலாம் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் பிரேரணைக்கு கனடா, ஜெர்மனி, மொன்டினிக்ரோ, வடக்கு மெசிடோனியா, மலாவி ஆகிய நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ள நிலையில் பிரேரணையைத் தோற்கடிக்க இலங்கை அரசாங்கம் இராஜதந்திர ரீதியிலான முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு அங்கத்துவ நாடுகளுடன் பேச்சுநடத்தி வருகிறது.

ஐக்கிய நாடுகள் அமைப்பில் பிரதிநிதித்துவப்படுத்தும் 193 நாடுகள் மத்தியில் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் வாக்களிக்கும் அதிகாரத்தைக் கொண்ட நாடுகள் 47 இடம்பெற்றுள்ளன.

இதேவேளை, பிரேரணையை வெற்றிபெற வைப்பதற்கு அனுசரணை நாடுகள் ஆதரவு திரட்டி வருகின்றன. இதில் இந்தியாவின் ஒத்துழைப்பை பெற இருதரப்பும் முயன்று பெறுகிறது. இந்நிலையில் இந்தப் பிரேரணை வெற்றி பெறும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை வௌியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.