இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய் சங்கர், கூட்டமைப்புடனான சந்திப்பின்போது, வழக்கத்திற்கு மாறாக ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியிருக்கின்றார். அதாவது. அரசாங்கத்தின் அரசியல் யாப்பு முயற்சிகளுக்குள் சிக்கிவிடாதீர்கள். அண்மையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடிய விடயங்களை சம்பந்தன் பகிர்ந்து கொண்டபோதே, அவர் மேற்கண்ட வாறு குறிப்பிட்டிருக்கின்றார்.
ரணில் – மைத்திரி ஆட்சிக் காலத்தில், புதியதோர் அரசியல் யாப்பு தொடர்பில் சம்பந்தன் தரப்பு, காலத்தை விரயம் செய்திருந்தது. சம்பந் தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, ஒருமுறை கூட சம்பந் தன் இந்தியாவுக்கு செல்லவில்லை. புதிய அரசியல் யாப்பு முயற்சி வெற்றியளிக்காது – காலத்தை விரயம் செய்யாமல், அரசியலமைப்பில் இருக்கின்ற 13ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள குறைபாடுகளை நிவர்த்திசெய்து, ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் வகையிலான முயற்சிகளை செய்யுமாறு பலரும் கோரியிருந்தனர்.
பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. குறிப்பாக டி. பி. எல். எவ் தலைவர் சித்தார்த்தன், புதிய அரசியல் யாப்பில் தனக்கு நம்பிக் கையில்லை என்று தொடர்ச்சியாக கூறிக்கொண்டிருந்தார். ஆனால், சம்பந்தனும் சுமந்திரனுமே புதிய அரசியல் யாப்பு தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கையூட்டிக் கொண்டிருந்தனர்.
ரணில் – மைத்திரி கால சம்பந்தனின் அணுகுமுறை முற்றிலும் கொழும்பு மட்டும் போதுமானது என்னும் அடிப்படையில்தான் இருந் தது. இந்தியாவின் உதவி தேவையில்லை என்னும் அடிப்படையிலேயே சம்பந்தனும் சுமந்திரனும் செயல்பட்டுவந்தனர். ஆனால், அனைத்தும் தோல்விடைந்த நிலையிலேயே மீளவும் இந்தியாவின் தயவை நாடினர். இந்த அனுபத்திலிருந்தே ஜெய்சங்கர் இவ்வாறானதொரு கருத்தைத் தெரிவித்திருக்கின்றார்.
ஏற்கனவே, ரணில் – மைத்திரி கால அரசியலமைப்பு திட்டத்துக்குள் சிக்குப்பட்டு காலத்தை விரயம் செய்ததுபோல் மீளவும் செய்யாதீர்கள் – என்பதுதான் அவர் சொல்லா மல், சொன்ன செய்தி.
இலங்கையின் அரசியலமைப்பு பிரச்னையை வெறுமனே சட்டக் கண்கொண்டு நோக்கினால் அதிக விடயங்கள் விளங்காமலேயே போய்விடும். இலங்கையின் அரசியலமைப்பு விடயம் வெறும் சட்ட ரீதியில் தீர்க்கக் கூடிய பிரச்னையென்றால் பிரச்னைகள் எப்போதோ தீர்ந்திருக்கும். எனவே, விடயங்களை ஆழமாக விளங்கிக் கொண்டு, கூட்டமைப்பு, சூழ்நிலைமைகளுக்கு ஏற்ப விடயங்களைக் கையாள வேண்டும். முன்னைய அரசாங்கத்தில் எதிர்பார்த்த விடயங்கள் எவையும் நடைபெறாமல்போன பின்னர், இந்தியாவிடம் சென்றது போன்றல்லாமல், இந்தியா என்ன கூறுகின்றது – என்பதைத் துல்லிய மாகப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்படுவது தொடர்பிலேயே கூட்டமைப்பினர் சிந்திக்க வேண்டும். ஜெய்சங்கர் அவ்வாறு கூறிய தற்கு பின்னால் பிறிதொரு விடயமும் உண்டு. அதாவது, அரசாங்கம்
தமிழர் பிரச்னையை ஓர் உள்நாட்டு பிரச்னையென்றவாறு வாதிட முயற்சிக்கின்றது.
தமிழர் பிரச்னையில் இந்தியாவின் தலையீட்டை நுட்பமாக தவிர்க்க விரும்புகின்றது. அரசாங்கத்தின் நகர்வுகளுக்குள் சிக்கிவிடாதீர்கள் – சிக்கிக் கொண்டால், எங்களால் எதுவும் செய்ய முடியாமல் போய்விடும். ஜெய்சங்கர் சொல்லாமல் சொன்ன இன் னொரு செய்தி இது.