தமிழகத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுப்பு

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி தனுஷ்கோடி அரிச்சல்முனையில் தமிழர் கட்சி சார்பில் அனுசரிக்கப்பட்டது.

இலங்கையில் உள்நாட்டு போரின் போது ஈழத் தமிழர்களை கொத்து கொத்தாக முள்ளிவாய்க்காலில் கொன்று குவிக்கப்பட்டதை அடுத்து ஆண்டுதோறும் உலக தமிழர்கள் மற்றும் இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்களால் மே 18ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில செயலாளர் தீரன் திருமுருகன் தலைமையில் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் உருவப்புகைப்படத்தை தெர்மாகோல் மூலம் உருவாக்கப்பட்ட படகில் வைத்து கடலில் விடப்பட்ட பின்னர் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த ஈழத்தமிழர் நினைவாக கோஷங்கள் எழுப்பியதோடு, ராஜபக்சேவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்தனர்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை சென்னையிலுள்ள மெரினா கடற்கரையில் அமைக்க வேண்டும். மே 18 நினைவு தமிழின அழிப்பு நாளாக அறிவித்து அனுசரிப்பு விழாவாக தமிழக அரசு நடத்த வேண்டும் என அஞ்சலி கூட்டத்தில் பேசினர்.