தமிழகம், கேரளாவில் சிறப்பு தேடுதல்! – விடுதலைப் புலிகள் தொடர்பான புத்தகங்கள் மீட்பு

இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ​​விடுதலைப் புலிகள் தொடர்பான புத்தகங்கள் உட்பட பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய புலனாய்வு முகமையால் இன்று தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கின்றன.

தமிழகம் மற்றும் கேரளாவில் ஏழு இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்திய தேசிய புலனாய்வு நிறுவனத்தின் தகவல்படி விடுதலைப் புலிகள் தொடர்பான புத்தகங்கள், கையடக்க தொலைபேசிகள், சிம் அட்டைகள் உட்பட ஏழு மின்னணு சாதனங்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டன.

ஏப்ரல் மாதத்தில், இந்திய கடலோர காவல் படையினர் 300 கிலோகிராம் ஹெராயின், ஐந்து துப்பாக்கிகளுடன் ஆறு இலங்கையர்களை கைது செய்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் முக்கிய சந்தேகநபர் பாகிஸ்தான் பிரஜை என்றும் அவருக்கு புலிகளுடன் நேரடி தொடர்பு இருப்பதாகவும் இந்திய பாதுகாப்பு படையினர் வெளிப்படுத்தியுள்ளனர்.