தமிழரசுக்கட்சியால் உடைக்கப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பை மீண்டும் ஒன்றாக இணைந்து கூட்டமைப்பாக போட்டியிடவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு

அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளும் ஒன்றாக இணைந்து கூட்டமைப்பாக போட்டியிடவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளாா்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒன்றாக இணைந்து கூட்டமைப்பாக போட்டியிடவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு ஆனால் வீட்டுச்சின்னம் நீதிமன்றில் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த தேர்தலில் அதுவெளியில் வருவதே சந்தேகம் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிந்துள்ளதன் காரணமாக நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் பதவியை செல்வம் அடைக்கலநாதனுக்கு வழங்கமுடியாது என்றவகையில் சிலர் பேசி வருவதாகவும், ஆனால் கட்சி செயற்பாடுகளுக்கும் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் பதவிக்கும் தொடர்பு இல்லையென்ற காரணத்தினால் சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ள செல்வம் அடைக்கலநாதனை நாடாளுமன்ற குழுக்களின் தலைவராக நியமிக்குமாறு கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தங்களால் முன்மொழியப்படும் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது தமக்கு அழைப்பு விடுவதற்கு அரச ஆதரவு அமைச்சர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அச்சம் கொள்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் மேலும் தெரிவித்துள்ளாா்.