நீண்ட நாட்களாக ஒத்திவைக்கப்பட்ட ஜனாதிபதி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
ஜனாதிபதி செயலகத்தில் காலை 10.30 மணிக்கு ஆரம்பமான குறித்த சந்திப்பு பகல் 1.30 மணி வரை நீடித்தது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகள் மாத்திரமே ஜனாதிபதியுடனான உத்தியோகபூர்வ சந்திப்பில் கலந்துகொண்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் தெரிவித்தார்.
கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, PLOTE அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான M.A. சுமந்திரன், S. சிறிதரன், இராசமாணிக்கம் சாணக்கியன், த.கலையரசன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
பங்காளிக் கட்சியான TELO எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் ஜனாதிபதியுடனான உத்தியோகபூர்வ சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை என சுமந்திரன் தெரிவித்தார்.
ஜனாதிபதியுடனான உத்தியோகபூர்வ சந்திப்பு மூன்று தடவைகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான அழுத்தத்தை பிரயோகிக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் 07 தமிழ் தேசிய கட்சிகள் கூட்டமைப்பு உள்ளிட்ட ஏழு கட்சிகள் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், ஜனாதிபதியுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடலை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.