இந்தியாவின் உதவியைப் பெறும் நோக்கில் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ புதுடில்லி சென்று, இந்திய பிரதமரை சந்தித்தி ருக்கின்றார். இந்திய பிரதமர் ஸ்ரீநரேந்திர மோடி, விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யக்கூடுமென்று எதிர்பார்க்கப்படும் சூழ லில்தான், பஸில் ராஜபக்ஷ – பிரதமர் மோடி சந்திப்பு இடம்பெற்றி ருக்கின்றது. ஓர் உடனடி அயல் நாடென்னும் வகையில், இந்தியா விடம் செல்லுதல் என்பது, கொழும்பின் பாரம்பரிய இராஜதந்திர மாகும்.
இந்தியா மறுக்கின்ற சூழலிலேயே ஏனைய நாடுகளின் உத வியை கொழும்பு பெற முயற்சிப்பதுண்டு. இதனை ஒரு வெற்றிகர மான தந்திரோபாயமாகவே சிங்கள ஆட்சியாளர்கள் பின்பற்றி வந்திருக்கின்றனர். ஆனால், தற்போதைய நிலைமை வேறு. ஏனெனில், வேறு நாடுகளிடம் சென்றாலும்கூட, இலங்கை எதிர் கொண்டிருக்கும் நெருக்கடிநிலைமையை சரி செய்யக்கூடிய
நிலையில் கொழும்பு இல்லை.
இவ்வாறானதொரு சூழலில்தான்,இந்தியாவின் உதவியை பெற்று, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளுவதற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்து வரு கின்றது.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட சில கசப் புணர்வுகளையும் விரிசல்களையும் போக்கிக் கொள்ளும் வகை யிலும் அரசாங்கம் செயல்பட்டு வருகின்றது. தமிழ் சூழலில் இது அச்சத்துடன் நோக்கப்படுகின்றது. அதாவது, கொழும்பு புதுடில்லி யுடன் நெருக்கமாகினால், இந்தியா ஒருவேளை ஈழத் தமிழர் பிரச்னையில் அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாமல் போய்விட
லாமென்று, தமிழ் தேசிய தரப்புக்கள் சிந்திக்கின்றன. கொழும்பு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ் மக்களின் அரசியல் பிரச்னைகளை புறம்தள்ளிவிடலாமென்றும் அவர்கள் எண்ணு கின்றனர். இந்த அச்சத்தை முழுமையாக நிராகரிக்க முடியாவிட்டா லும்கூட, தமிழ் தேசிய தரப்புக்களின் அரசியல் முன்னெடுப்புகளில் தான் இந்தியாவின் ஈடுபாடும், தலையீடும் தங்கியிருக்கின்றது.
வெறுமேன ஒரு கடிதத்தை அனுப்பிவிடுவதன் மூலம் – இந்தி யாவின் தலையீட்டை ஏற்படுத்த முடியாது. புதுடில்லியை நோக்கி தொடர்ந்தும் செயல்பட வேண்டும். புதுடில்லியை நோக்கி செயல்படு வதென்பது – அங்குள்ள ஊடகங்களை நோக்கி – அயலுறவுக் கொள்கையில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய சிந்தனைக் கூடங்களை நோக்கி செயல்படுவதாகும். இதனைத்தான் மொறகொட செய்து கொண்டிருக்கின்றார். மஹிந்த காலத்தில் ஏற்பட்ட விரிசல்களை அவர்களால் எவ்வாறு வெற்றிகொள்ள முடிகின்றது? அரசிடம் வசதிகளும் வாய்ப்புக்களும் அதிகம் – எங்களிடம் அவ்வாறான
வசதிகள் இல்லையென்று கூறிவிட்டு அமைதியடைய முடியாது.
அரசிடம் இருக்கின்ற வசதிகள் ஒருபோதுமே தமிழ் தேசிய தரப்பு களுக்கு கிட்டப் போவதில்லை. அப்படியாயின் வெறுமனே புதுடில் லிக்கும், ஐ. நா. மனித உரிமைகள் பேரவைக்கும் கடிதங்களை அனுப்பிவிட்டு, தேர்தலில் போட்டியிடுவது மட்டும்தான் தமிழ்த் தேசிய கட்சிகள் என்போரின் பணியாக இருக்கப் போகின்றதா?
இப்படித்தான் தமிழர்களின் அரசியல் பயணிக்கப் போகின்றது என்றால், ஒருபோதுமே தமிழர்களுக்கு வாய்ப்புக்கள் கிடைக்கப் போவதில்லை. இந்தியாவின் அழுத்தத்தை முன்வைத்து, களத்திலும் தமிழ்நாட்டிலும், புதுடில்லியிலும் ஒரே குரலில், ஒரே கோரிக்கையின் கீழ், செயலாற்ற வேண்டும். அந்தக் கோரிக்கை கடிதத்தில் முன்வைத்த கோரிக்கையிலிருந்து விலகிச் செல்லக் கூடாது. இதற்கு முதலில் களத்தில் தமிழ் தேசிய தரப்புக்கள் ஓர்
ஐக்கிய முன்னணியாக மாற வேண்டும். ஆனால், அதற்கான வாய்ப்புக்கள் தென்படவில்லை. தமிழர்கள் தங்களை தயார்படுத்தா மல், மற்றவர்களின் தலையீட்டை கோருவதில் எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை.