தமிழர்களின் கலை வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலம் பொற்காலம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
அண்மையில் இடம்பெற்ற கலாலயத்தின் வெளியீடான ‘விழுதொலிகள்’ இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், போர் முடிந்ததன் பின்னரான காலப்பகுதியில் கலைஞர்கள் தங்களின் படைப்புக்களுக்கு உரித்தான அந்தஸ்து கிடைப்பதில்லை என்பதான ஒரு குற்றச்சாட்டு கலைஞர்களால் முன்வைக்கப்பட்டிருக்கிறது என்றார்.
உண்மை தான், எம்மவர்கள் இந்த மண்ணில் இருந்தபோது கலைகளையும் கலைஞர்களையும் வளர்க்க விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகம் என்ற பிரிவு உருவாக்கப்பட்டு, அதனூடாக பாரம்பரிய கலைகளையும் பண்பாட்டையும் வளர்த்திருந்தார்கள் எனவும், அவர் கூறினார்.
‘தமிழர்களின் கலை வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலமே பொற்காலம் ஆகும்.
‘கலைஞர்களும் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆற்றிய பங்கும் மகத்தானது. தங்களின் கலைப்படைப்புக்களால் போராட்டத்தின் பக்கம் மக்களை எழுச்சிகொள்ள வைத்தவர்கள் என்றால் மிகையில்லை.
‘கலைஞர்களும் இந்த மண்ணில் மீளும் சிறப்பாக உரிய அந்தஸ்தத்தோடு வாழும் காலம் உருவாக்ப்படும்’ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.