கடந்த காலங்களில் போராட்ட இயக்கமாக இருந்த ஜே.வி.பியினருக்குக் கூட அவர்களது தலைவர்களை அஞ்சலிப்பதற்கு அனுமதிக்கின்றார்கள். ஆனால் ஏன் தமிழ் மக்களுக்கு மாத்திரம் இவ்வாறான தடைகள். தமிழர்களின் மீது மாத்திரம் இந்த அரசாங்கம் முற்றுமுழுதான தங்கள் இனவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவது ஏன்? ஏன தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதித் தவிசாளருமாகிய இந்திரகுமார் பிரசன்னா தெரிவித்தார்.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர்களான குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் படுகொலை நினைவேந்தலை நடாத்துவதற்கு பொலிசாரினால் நீதிமன்றத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டமை தொடர்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்ததார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
படுகொலைக்குள்ளான எமது தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்த முடியாத வண்ணம் இந்த அரசானது எனக்கும் எமது பாராளுமன்ற உறுப்பினருக்கும் தடை விதித்திருக்கின்றது. 1983ம் ஆண்டு படுகொலைக்குப் பின்பு தொடர்ச்சியாக நாங்கள் வடக்கு கிழக்கிலே எமது தவைர்களுக்கான அஞ்சலியைச் செலுத்திவருகின்ற வேளையில் இம்முறை இந்த அரசினால் மாத்திரம் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.
எங்களுடைய தமிழ் ஈழ விடுதலை இயக்கமானது இலங்கையில் சட்டபூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி. எமது கட்சியின் மூத்த தலைவர்கள் தான் தங்கதுரை, குட்டிமணி அவர்கள். எமது தலைவர்களை அஞ்சலி செலுத்துவதற்கு எமது கட்சிக்குத் தடை விதித்திருப்பதென்பது இந்த அரசின் ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் எதிரான செற்பாடாகவே இருக்கின்றது.
இந்த நாட்டில் தமிழினத்திற்காகப் போராடி சிறைச்சாலையிலே படுகொலை செய்யப்பட்டவர்கள். அந்த படுகொலை இடம்பெறுகின்ற போது அப்போது ஆட்சியில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சி கூட அவர்களின் ஆட்சிக் காலத்தில் நினைவுகூரல்களை மேற்கொள்வதற்கு அனுமதித்திருந்ததது. ஆனால் இந்த அரசாங்கம் இனவாதத்தை மாத்திரமே கடைப்பிடித்து வருகின்றது.
கடந்த காலங்களில் போராட்ட இயக்கமாக இருந்த ஜே.வி.பியினருக்குக் கூட அவர்களது தலைவர்களை அஞ்சலிப்பதற்கு அனுமதிக்கின்றார்கள். ஆனால் ஏன் தமிழ் மக்களுக்கு மாத்திரம் இவ்வாறான தடைகள். தமிழர்களின் மீது மாத்திரம் இந்த அரசாங்கம் முற்றுமுழுதான தங்கள் இனவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவது ஏன்?
தமிழ் மக்கள் ஒன்றை உணர்ந்துகொள்ள வேண்டும். இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எந்தவித விமோசனத்தையும் தரப்போவதில்லை.
1983ம் ஆண்டு எமது தலைவர்களின் படுகொலையினுடாகத் தான் உலகத்திலுள்ள ஏனைய நாடுகளுக்கு இலங்கையில் தமிழர்கள் இருக்கின்றார்கள், இனஅழிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள் என்ற செய்தி தெரிய வந்தது. ஏன் தற்போது அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா கூட இந்தப் படுகொலையில் இருந்து தப்பித்தவர்தான். ஆனால் இந்த அரசாங்கத்துடன் இருந்து அவரும் அந்த நிகழ்வுகளின் தடைக்குத் துணை போகின்றார்.
எனவே இந்த அரசாங்கம் தொடர்ச்சியாக எங்கள் இனத்தின் மீதும் எங்கள் மக்கள் மீதும் துவேசத்தைக் கக்கிக் கொண்டிருக்கின்றது. எனவே நாங்கள் ஒற்றுமையாக இருந்து எமது இனத்தின் விடுதலைக்காகவும், எமது இனத்திற்காகப் போராடியவர்களுக்காகவும் அஞ்சலிக்க வேண்டும். இவ்வாறான அஞ்சலி நிகழ்வுகளுக்கு அரசால் விதிக்கப்படும் தடைகளை தமிழீழ விடுதலை இயக்கம் சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று தெரிவித்தார்.