தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இனிஒருபோதும் இடம்பெறாது என்பதற்கு உத்தவாதம் இல்லை என்பதற்கு இனத்திற்கு மறுக்கப்படும் நீதி உணர்த்துகின்றது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும் ஆன தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார்.
வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் இடம்பெற்ற கறுப்பு ஜுலை நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மேலும் கூறியுள்ளதாவது, “படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொள்வது மட்டுமல்ல. அவர்களை நினைவு கூர்வதும் இராணுவ மயமாக்கலின் ஊடாக தடை செய்யப்படுகின்றது.
இன்றும் கூட சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நினைவேந்தல் நிகழ்வினை நாம் செய்ய முற்பட்ட வேளையிலும் பொலிஸார் எமது அலுவலகத்தை கண்காணித்தனர்.
இத்தகைய நிலைமைகள் காணப்படுகின்றமையினால், பல உறுப்பினர்கள் அச்சத்தின் நிமிர்த்தம் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை.
உலகம் அறிந்த கறுப்பு யூலை போன்ற இனவாதத் தாக்குதல்கள் இனியும் தமிழ் மக்கள் மீது முடுக்கிவிடக்கூடாது என்பதற்காகவும் நினைவு கூர்தல் சுதந்திரத்தை பாதுகாப்பதற்காகவும் அனுஸ்டிக்கின்றோம்.
இதேவேளை யுத்த காலத்தில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் முழுமையான அனுசரனையோடு தமிழ் மக்கள் 2 ஆயிரம் தொடக்கம் 3 ஆயிரம் வரையில் மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர்.
மேலும் எங்களது தலைவர்கள் சிறையில் கண்கள் தோட்டப்பட்டு கொல்லப்பட்டனர். தமிழ் மக்களின் சொத்துக்கள் வாக்காளர் இடாப்பில் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு இழிக்கப்பட்டன. இவைகள் திட்டமிடப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகள் ஆகும்.
இவை போன்று தமிழர் வரலாற்றில் ஏராளமான கொடுமைகள், மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன. இவைகளுக்கு 38 வருடங்கள் கடந்தபோதும் எமக்கு நீதி கிடைக்கவில்லை.
எதிர்வரும் காலங்களில் இத்தகைய செயற்பாடுகள் இடம்பெறாது என்பதற்கும் உத்தரவாதமில்லை என்பதனை இனத்திற்கு மறுக்கப்படும் நீதி உணர்த்துகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.