தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

2009ஆம் ஆண்டு இறுதிக்கட்டப்போரில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து கடைப்பிடிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் ஓர் அங்கமான ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ வழங்கும் நிகழ்வு தமிழர் தாயகத்தில் ஆரம்பமாகியுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினமும் (10.05.2023) இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி , கிளிநொச்சி கந்த சுவாமி ஆலய முன்றலில் இன்றைய தினமும் (10-05-2023) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்வின் முன்னதாக வர்த்தகர்கள் மற்றும் வீடுகளுக்குச் சென்று பொதுமக்களிடம் பிடியரிசி பெற்றுக் குறித்த ஆலய முன்றலில் கஞ்சி காய்ச்சப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் மாற்றத்திற்கான இளையோர் அமைப்பு கஞ்சி வழங்கும் நடவடிக்கை இன்றைய தினமும் (10.05.2023) முன்னெடுத்துள்ளனனர்.

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் முருகன் ஆலயத்திற்குச் செல்லும் வீதியில் கஞ்சி காய்ச்சப்பட்டு முள்ளிவாய்க்காலில் மக்கள் பட்ட அவலத்தினை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கஞ்சியினை நினைவுப்படுத்த வேண்டியதேவை குறித்து ஏற்பாட்டாளர்கள் மற்றும் பொது மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

மேலும், முள்ளிவாய்க்காலில் 2009ஆம் ஆண்டு மக்களுக்குக் கஞ்சி வழங்கிய ஒருவர் சாட்சியமாக வழங்கியுள்ளதை நினைவு படுத்தியுள்ளார்.