தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை முயற்சிக்கு வடக்கு, கிழக்கு சிவில் சமூகம் வரவேற்பு

தமிழ் மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்த ஒரு விடயத்தை இப்போதாவது உணர்ந்து நிறைவேற்றிக்கொள்ள முன்வந்துள்ளார்கள். இது உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான ஒருங்கிணைவாக மாத்திரம் இல்லாமல் தொடர்ச்சியாக ஓரணியாகச் செயற்படவேண்டும். நிச்சயமாக இந்த நல்லமுயற்சியை முறியடிக்க – குழப்ப தீய சக்திகள் முயலும். அதையும் முறியடித்து இந்த ஒற்றுமை தொடரவேண்டும்.” – இவ்வாறு வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தளமாகக் கொண்டு செயற்படும் சிவில் அமைப்புக்கள், மதத் தலைவர்கள் தெரிவித்தனர்.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் கடந்த சனிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் சந்திப்பு நடத்தியிருந்தனர். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஓரணியாக – கூட்டமைப்பாகப் போட்டியிடுவதற்கான சாத்தியங்கள் தொடர்பில் ஆராய்ந்திருந்தனர். இது தொடர்பில் சிவில் மற்றும் மதத் தலைவர்களிடம் கேட்டபோதே மேற்கண்டவாறு பதிலளித்தனர்.

அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அ.விஜயராஜ்,

“தமிழ்த் தேசியம் என்ற போர்வையில் கடந்த 13ஆண்டுகளாக பிளவுபட்டு நிற்கின்றார்கள். உள்ளூராட்சித் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவது தொடர்பான பேச்சுக்கள் மகிழ்ச்சியளிக்கின்றன. இதனை முழுமனதாக வரவேற்கின்றோம்.

தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிளவின் காரணமாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று ஆசனங்கள் சிங்கள அல்லது அரச சார்பு கட்சிகளுக்கு தாரைவார்க்கப்பட்டன. எதிர்காலத்தில் இந்த நிலைமை தோன்றாமலிருக்க ஒன்றிணைவு அவசியம்.

மக்கள் சலுகைகளுக்காக வாக்களிக்கும் கலாசாரமும் இந்த ஒன்றிணைவு ஊடாக முடிவுக்கு வரலாம். தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒன்றிணைவு என்பது தமிழ் மக்களுக்கு எப்போது நன்மையே பயக்கும்” – என்றார்.

சிவகுரு ஆதின குருமுதல்வரும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரியக்கத்தின் தலைவருமான வேலன் சுவாமிகள்,

“தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய கட்சிகள் அனைத்து விடயங்களிலும் ஒன்றிணைந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தனித்துவம் ஒவ்வொரு நிலைப்பாடுகள், கருத்து வேறுபாடுகள் இருக்கும். இது எல்லாவற்றையும் கடந்து எங்களுடைய 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாவீரர்கள், 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுடைய உயிர்த் தியாகங்கள்,  அர்ப்பணிப்புகள் வீண்போகாத வகையில் தமிழ்த் தேசிய பரப்பு ஒன்றாக வேண்டும் என்பதே எங்களுடைய உறுதியான நிலைப்பாடு.

இந்த ஆறு கட்சிகளுக்கு தோன்றியுள்ள எண்ணம் அனைத்துத் தமிழ்க் கட்சிகளுக்கும் வரவேண்டும்” – என்றார்.

திருகோணமலைமறை மாவட்ட ஆயர் அருள்திரு நோயல் இம்மானுவேல்,

“தமிழ்க் கட்சிகள் எமது மக்களின் நலன் மற்றும் எதிர்காலத்தை முன்னிறுத்தி ஒரு சரித்திரப்பூர்வமான சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்கள் என்று அறிகின்றேன். இது பெரிதும் வரவேற்கத்தக்க விடயமாகும்.

தேர்தல் என்று வரும் போது, கட்சிகள் பிளவுபட்டு நிற்பதால் வரக் கூடிய விளைவுகளை அனைவரும் அறிவர். தொடர்ந்து அதே பிழைகளை நாம் விடாமல் ஒன்றுபட்டு மக்களின் நலனையும் இருப்பையும் எதிர்காலத்தையும் கருத்திற்கொண்டு ஒற்றுமையாகச் செயற்படுவது காலத்தின் தேவையாகவும் உள்ளது. இது மக்களின் தேவையாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

எனவே, தமிழ்க் கட்சிகள் அனைத்தும் தமது பேதங்களைக் கடந்து மக்களின் நலனில்  அக்கறையுள்ளவர்களாக செயற்படவேண்டும் என்பதே எமது தனிப்பட்ட விருப்பாகவும் வேண்டுதலாகவும் உள்ளது.

இந்த முயற்சியை முறியடிக்க பல தீய சக்திகள் செயற்படலாம். அவற்றையும் வென்று ஒற்றுமையாகச் செயற்பட வாழ்த்துகின்றேன்” – என்றார்.

நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமி,

“இன்றைய காலத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுபடுவது என்பது மிக முக்கியமானது. இப்போது அரசுடன் பேச்சு இடம்பெறுகின்றது. தமிழ்க் கட்சிகள் ஒவ்வொன்றாகச் செயற்படுவது ஆரோக்கியமல்ல. ஒரே குரலில் பேசும்போதுதான் அது பலமாக இருக்கும்.

தீர்வுக்கான சாத்தியங்கள் இருப்பதாகச் சொல்லப்படும் இந்தச் சூழலில் நீங்கள் ஒன்றுபட்டு நின்று செயற்படவேண்டும் என்பதுதான் மக்களினதும் எங்களினதும் மனப்பூர்வமான விருப்பம்” – என்றார்.

தென்கயிலை ஆதீனத்தின் குரு முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார்,

“இந்த ஒற்றுமையை மக்கள் எப்போதோ வலியுறுத்தியிருந்தார்கள். ஆனால், கட்சிகள் இதனைப் பேச்சில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நடைமுறையில் செய்து காட்டவில்லை. ஆனால், இப்போது ஒன்றிணைவதற்காக பேசுகின்றார்கள். இது சிறப்பாக நடந்தால் எமது இனத்துக்கு எதிர்காலம் நன்மையாக அமையும். இவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” – என்றார்.

தென்னிந்திய திருச்சபையின் பேராயர் வே.பத்மதயாளன்,

“நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலிலே அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்றாக இணைந்து பயணிப்பதற்கான முயற்சிகள் தொடர்பில் மகிழ்ச்சி அடைகின்றேன். பல்வேறு வேளைகளிலும் நாங்கள் உடைவுபட்டு பிளவுபட்ட எதனையும் சாதித்துக் கொள்ள முடியாது.

கட்சி ரீதியான வேறுபாடுகள் இருந்தாலும் தமிழ் மக்களுடைய விடுதலைக்காகவும், பெரும் போர் முடிவடைந்து அதன் பின்னர் பல்வேறு விதமான அழுத்தங்கள் தாக்கங்கள் நிலவு நிலவுகின்ற சூழ்நிலையில் அரசியல் ரீதியான வேறுபாடுகள் களைந்து அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்றாகப் பயணிக்கக்கூடிய கருத்துகளை அறிந்து, ஒரு புதிய பேராயராக உண்மையிலேயே நான் மகிழ்ச்சி அடைகின்றேன். அடுத்த தீர்மானங்களும் தீர்வுகளும் எதிர்காலத்துக்கு பொருத்தமானதாக இருக்க வேண்டும் என நான் வேண்டுகின்றேன்.

ஏனென்றால் கடந்த காலங்களில் பல கசப்பான சம்பவங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதோடு மக்களை மையப்படுத்திய அரசியலை நான் வலியுறுத்துகின்றேன்.

மக்கள் பிரதிநிதிகளை மாத்திரம் அல்ல மக்களை மையப்படுத்திய ஒரு தலைமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும். இது ஒரு ஆரம்பமே. இனி வர இருக்கின்ற தேர்தல்கள் எல்லாம் மக்களுக்காகவும் எங்களுடைய விடுதலை உணர்வு சார்ந்ததாகவும் மக்கள் மையப்படுத்தப்பட்டதாக இருக்கின்ற போது உண்மையிலேயே அது பெரிய மாற்றத்தை உருவாக்கும்.

இந்தச் செயற்பாட்டை நான் உண்மையிலேயே ஆதரிக்கின்றேன். இந்தச் செயற்பாட்டில் ஈடுபடக்கூடிய ஒவ்வொரு தமிழ் அரசியல் கட்சிகளையும் நான் பாராட்டுகின்றேன். தொடர்ந்து மக்களுடைய வாழ்வியலுக்காக இவர்கள் பாடுபடுவதையிட்டு நான் வாழ்த்துகின்றேன்” – என்றார்.