தமிழ்க் கட்சிகளை ஒன்றுபடுத்தும் முயற்சியினை வரவேற்கின்றோம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) மத்திய குழு உறுப்பினரும் நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினருமான குமாராசாமி மதுசுதன் தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னர் தமிழ்த்தேசியக் கட்சிகளின் ஒன்றுபடுத்தல்கள், பத்துக் கட்சிக் கூட்டு என இடம்பெற்றாலும் அவை பின்னர் பிசுபிசுத்து போயின. தற்போது கூட்டமைப்பின் உறுப்புக் கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் அந்த முயற்சியினைக் கையில் எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.
ஆரம்பகால விடுதலை இயக்கம் மற்றும் கூட்டமைப்பு உருவாக்கம் முதல் அதில் இன்று வரை ஒற்றுமையாகப் பயணிக்கும் ஒரே இயக்கமாக அது அமைவதால் அந்த ஒற்றுமை முயற்சி பெரிதும் வெற்றியளிக்க கூடியது.
மாறிவரும் அரசியல் சூழ்நிலைகளில் தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமை என்பது தமிழர் நலன்களுக்காக இன்றியமையாதது.
இந்த ஒற்றுமை முயற்சிகள் தள்ளிப் போனாலும் இறுதியில் தமிழர்களின் நலனுக்காக வெற்றியளிக்க வாழ்த்துகிறேன் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார் .