தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

நேற்று 29 ஆம் திகதி வவுனியா விருந்தினர் விடுதியில் ஒரு சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டது. தமிழ் மக்கள் பொதுச்சபை என்று அழைக்கப்படும் மக்கள் அமைப்பு சந்திப்பை ஒழுங்குபடுத்தியது. இதில் தமிழ் பொது வேட்பாளரை ஏற்றுக் கொள்ளும் தமிழ் தேசிய கட்சிகள் 7 வருகை தந்தன. கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும் இடையில் ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை எழுதுவது மேற்படி சந்திப்பின் நோக்கம். காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 4 மணி வரை நடந்த சந்திப்பின் முடிவில் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை இருதரப்பாலும் எழுதப்பட்டு,ஏற்றுக் கொள்ளப்பட்டது.அந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்படும் பொதுக் கட்டமைப்பை தமிழ்த் தேசியப் பேரவை என்ற பெயரில் அழைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது.கொள்கைளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைத்தாத்திடும் சம்பிரதாயபூர்வ நிகழ்வு அடுத்த மாதம் 6 ஆம் திகதி இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறுகிய காலத்துக்குள் மூன்று கட்டமைப்புப் பெயர்கள் புழக்கத்துக்கு வந்துள்ளன. முதலில் வவுனியாவில் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி கூடிய பொழுது அது சிவில் சமூகங்களின் கூட்டிணைவு என்று அழைக்கப்பட்டது.அதே கூட்டிணைவு பின்னர் அதிகளவு குடிமக்கள் சமூகங்களை இணைத்துக் கொண்டு தன்னை ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டமைப்புகளின் மூலம்,பலப்படுத்திக் கொண்டு,தன் பெயரை தமிழ் மக்கள் பொதுச்சபை என்று அழைத்துக் கொண்டது.

அந்தப் பொதுச்சபையானது தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் இறங்கி சிறிய மற்றும் பெரிய சந்திப்புகளை நடத்தி வருகின்றது. தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பாக கருத்தறிவதும் கருத்துக்களைப் பரப்புவதும் சந்திப்புகளின் நோக்கம் ஆகும்.

மேற்படி தமிழ் மக்கள் பொதுச்சபையானது நேற்று கட்சிகளோடு இணைந்து ஏற்படுத்திக் கொண்ட பொதுக் கட்டமைப்புக்கு தமிழ்த் தேசியப் பேரவை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்பேரவையானது எதிர்காலத்தை ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தத் தேவையான உப கட்டமைப்புகளை உருவாக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய பேரவையில் மக்கள் அமைப்பை சேர்ந்தவர்களும் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் சம அளவில் இருப்பார்கள். அதுபோலவே அப்பொதுக் கட்டமைப்பின் கீழ் உருவாக்கப்படும் உபகட்டமைப்புகளும் சம அளவுக்கு மக்கள் அமைப்பை சேர்ந்தவர்களையும் கட்சிகளைச் சேர்ந்தவர்களையும் கொண்டிருக்கும்.

இந்த உபகட்டமைப்புகளில் ஒன்றுதான் யார் பொது வேட்பாளர் என்பதனைத் தீர்மானிக்கும். மற்றொரு கட்டமைப்பு பொது வேட்பாளருக்குரிய தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும். மற்றொரு கட்டமைப்பு பிரச்சாரப் பணிகளைத் திட்டமிடும், முன்னெடுக்கும். மற்றொரு கட்டமைப்பு தேர்தல் நிதியை நிர்வகிக்கும். இவ்வாறு கட்டமைப்புகளை உருவாக்கி அக்கட்டமைப்புகளுக்கு ஊடாக ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியப் பேரவை என்று அழைக்கப்படும் புதிய கட்டமைப்பானது ஈழத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய தோற்றப்பாடு அல்ல. ஏற்கனவே தமிழ் மக்கள் பேரவையில் அது பரிசோதிக்கப்பட்டிருக்கின்றது. 2014க்குப் பின் தமிழ் மக்கள் பேரவையானது கட்சிகளையும் மக்கள் அமைப்புகளையும் கொண்ட ஒரு ஹைபிரிட் வடிவத்தில் உருவாக்கப்பட்டது.அதன் இணைத் தலைமைகளாக மக்கள் பிரதிநிதிகளும் பிரதிநிதித்துவ அரசியலில் ஈடுபடாத சிவில் சமூகத்தில் இருந்து வந்தவர்களும் காணப்பட்டார்கள்.

அப்படி ஒரு கட்டமைப்பை உருவாக்குவதற்கு அந்த காலகட்டத்தில் ஒரு தேவை இருந்தது. அக்கட்டமைப்பு ,அதாவது தமிழ் மக்கள் பேரவையானது குறிப்பிட்ட காலகட்டத்திற்கு தமிழ் அரசியலில் அதிகரித்த அதிர்வுகளை ஏற்படுத்தியது. இரண்டு எழுக தமிழ்களை நடாத்தியது. அது மட்டுமல்ல, ஒரு புதிய யாப்பை உருவாக்குவதற்குத் தேவையான முன்மொழிவையும் முன் வைத்தது. அம் முன்மொழிவானது கடந்த 15 ஆண்டுகளிலும் இனப்பிரச்சினைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளில் முக்கியமானது.அது மக்கள் பிரதிநிதிகளும் பிரதிநிதித்துவ அரசியலில் ஈடுபடாத சிவில் சமூகங்களும் இணைந்து தயாரித்த ஒரு முன்மொழிவு என்ற அடிப்படையில் அதற்கு ஒரு காலம் முக்கியத்துவம் உண்டு.உள்ளடக்க முக்கியத்துவம் உண்டு. அந்த முன்மொழிவு இப்பொழுதும் செல்லுபடியாகக்கூடியது.

தமிழ் மக்கள் பேரவையானது பெருமளவுக்கு பிரமுகர் மைய அமைப்பாக இருந்தது. மேலிருந்து கீழ்நோக்கிக் கட்டப்பட்டது. அப்பிரமுகர்களில் ஒருவராக இருந்த விக்னேஸ்வரன் ஒரு கட்டத்தில் ஒரு புதிய கட்சியை அறிவித்ததோடு தமிழ் மக்கள் பேரவை அதன் மகிமையை இழக்கத் தொடங்கியது. மேலும் உள்ளூராட்சி சபைத் தேர்தலையொட்டி பேரவைக்குள் அங்கம் வகித்த கட்சிகள் ஒரு பொது உடன்பாட்டைக் காணத்தவறிய பின்னணியில், தமிழ் மக்கள் பேரவையானது படிப்படியாக இறந்து போய்விட்டது.

எனினும் அது அதன் இறுதி காலகட்டத்தில் உருவாக்கிய ஒரு கட்டமைப்புத்தான் ஜனாதிபதி தேர்தலுக்கான சுயாதீனக் குழு ஆகும். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் மக்கள் எப்படிப்பட்ட ஒரு உபாயத்தை கையாள வேண்டும் என்பதைக் குறித்து ஆராய்வதற்காக அப்படி ஒரு சுயாதீனக் குழுவை தமிழ் மக்கள் பேரவை உருவாக்கியது. அச்சுயாதீனக் குழுவானது, ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற பரிந்துரையை முன்வைத்தது. அந்த அடிப்படையில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளை அக்குழு சந்தித்தது. சில கட்சிகள் அக்கோரிகையை ஏற்றுக் கொண்டன. சில கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை.ஒரு கட்சி தேர்தலைப் பகிஷ்கரிக்கப் போவதாகக் கூறியது. அப்படிப்பட்டதோர் பின்னணியில், சுயாதீன குழுவானது ஒரு கட்டத்துக்கு மேல் முன்நகர முடியவில்லை.அது தனது அவதானிப்புகளையும் அனுபவங்களையும் ஓர் அறிக்கையாக வெளியிட்டதோடு தன் செயற்பாடுகளை நிறுத்திக் கொண்டது.

எனினும் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற விடயத்தைப் பொறுத்தவரையிலும் அதை ஒப்பீட்டுளவில் செயல் பூர்வமாக முன்னெடுத்த ஒரு கட்டமைப்பு என்று பார்த்தால், அது மேற்சொன்ன சுயாதீனக்குழுதான். சிவாஜிலிங்கம் குமார் பொன்னம்பலம் போன்றவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர்களாகக் களமிறங்கியிருக்கிறார்கள்தான். ஆனால் அவர்கள் பொது வேட்பாளர்கள் அல்ல.அவர்களை ஒரு பொதுக் கட்டமைப்பு முன் நிறுத்தவும் இல்லை.ஆனால் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் மக்கள் பேரவையால் உருவாக்கப்பட்ட சுயாதீனக் குழுவானது பெரும்பாலான தமிழ்த் தேசியக் கட்சிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பொது வேட்பாளரை நிறுத்த முயற்சித்தது. ஆனால் முடியவில்லை.

அச்சுயாதீனக் குழு தொடங்கிய வேலையைத்தான் அண்மை மாதங்களாக குடிமக்கள் சமூகங்களும் சில கட்சிகளும் சில செயற்பாட்டாளர்களும் இணைந்து முன்னெடுத்து வருகிறார்கள். அந்த முயற்சியின் ஒரு கட்டமாக முதலில் சிவில் சமூகங்கள் தங்களுக்கு இடையே ஒரு கூட்டிணைவை ஏற்படுத்தின. அடுத்த கட்டமாக அவை தம்மை ஒரு மக்கள் அமைப்பாக பிரகடனப்படுத்தின. அடுத்த கட்டமாக அந்த மக்கள் அமைப்பானது கட்சிகளோடு ஒரு பொது உடன்பாட்டுக்கு வந்திருக்கின்றது.அந்த உடன்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பொதுக் கட்டமைப்புக்கு இப்பொழுது தமிழ்த் தேசியப் பேரவை என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

மிகக் குறுகிய காலத்துக்குள் தமிழ் அரசியலில் மூன்று பெயர்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால் இம்மூன்று பெயர்களும் ஒரு விடயத்தைத் தெளிவாகக் காட்டுகின்றன. ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கும் மக்கள் அமைப்புகள், தொடர்ச்சியாகவும் கட்டமைப்பு சார்ந்தும் திடசங்கற்பத்தோடும் முன்னேறி வருகின்றன என்பதுதான் அது.

அவ்வாறு புதிய புதிய கட்டமைப்புகளை உருவாக்குவது என்பது மக்கள் அமைப்புக்கள் தீவிரமாக, விசுவாசமாக வினைபுரிகின்றன என்பதனைத் தான் காட்டுகின்றது. ஒரு கட்டமைப்பிலிருந்து மற்றொரு கட்டமைப்பு பிறப்பது என்பது ஓர் அரசியல் கூர்ப்பைக் காட்டுகின்றது. கட்டமைப்புக் கூர்ப்பைக் காட்டுகின்றது.

தமிழ்ப் பொது வாழ்வில் குறிப்பாக அரசியலில் கட்டமைப்பு சார்ந்து சிந்திக்கப்படுவது குறைவு என்ற விமர்சனம் உண்டு. அருவமாக சிந்திப்பது, கற்பனையில் திழைப்பது, இலட்சிய வாதமாகக் கதைப்பது போன்றவற்றுக்கும் அப்பால்,கட்டமைப்பு சார்ந்து செயல்படும் பண்பு மிகப் பலவீனமாகவே உள்ளது.கட்டமைப்புகளை உருவாக்கினால் தான் வேலை முன் நகரத் தொடங்கும்.எல்லாவற்றிக்கும் ஒரு கட்டமைப்பு சார்ந்த திட்டமிடல் இருக்க வேண்டும்.

ஒரு தமிழர் தனக்கு ஒரு வீட்டைக் கட்ட முற்பட்டால், முதலில் அவர் வாஸ்து சாஸ்திரம் பார்க்கும் ஒருவரிடம் போவார். அவருடைய ஆலோசனைப்படி வீட்டை எங்கே கட்ட வேண்டும்? எப்படி அறைகளை அமைக்க வேண்டும்? போன்ற விடையங்களைத் தெரிந்து கொள்வார். அதன்பின் அவர் எங்கே போக வேண்டும்? ஒரு கட்டிடப்படக் கலைஞரிடம் போக வேண்டும். ஆனால் பெரும்பாலானவர்கள் அவ்வாறு கட்டிடப்பட கலைஞர்களிடம் போவது கிடையாது. அதற்குச் செலவு அதிகமாக இருக்கும் என்பதும் ஒரு காரணம்.

ஆனால் அதற்குரிய துறை சார் ஞானம் கட்டிடப்பட கலைஞரிடம் தான் இருக்கும். ஒரு வீட்டைக் கட்ட விரும்பும் நபர் எதைக் கற்பனை செய்கின்றாரோ, அல்லது எதை மனதில் படமாக வரைந்து வைத்திருக்கின்றாரோ, அதனை தூலமாக, அதற்கான தொழில் நுட்ப மொழியில் வரைவதற்கு துறை சார்ந்த நிபுணத்துவம் தேவை. ஆனால் பெரும்பாலான தமிழ் மக்கள் அவ்வாறான துறை சார்ந்த நிபுணத்துவத்தை அணுகுவதில்லை. செலவு மட்டும் ஒரு காரணம் அல்ல.அது தொடர்பான கட்டமைப்பு சார்ந்த சிந்தனை குறைவு என்பதும் ஒரு காரணம் தான். அதன்பின் வீட்டுக்குரிய கட்டுமானத் திட்டத்தை வரையும் பொழுதும் அங்கே துறை சார் நிபுணத்துவம் பெறப்படுவது குறைவு.வீட்டு உரிமையாளரும் மேசனும் இணைந்து திட்டங்களைப் போடுவார்கள். படங்களை வரைவார்கள். அவர்களுடைய கற்பனை தான் முடிவில் வீடாக மாறும்.

இந்த விடயத்தில் அதாவது ஒரு வீட்டைக் கட்டும் விடயத்தில் அதற்குரிய தொழில்சார் நிபுணத்துவத்தை பெறுபவர்கள் மிகக் குறைவு. குறிப்பாக பண வசதி படைத்தவர்கள்தான் அதைச் செய்வது உண்டு.ஆனால் வசதி குறைந்தவர்கள் வாஸ்து விவகாரத்துக்கு மட்டும் ஒரு துறை சார் ஆளைத் தேடி போவார்கள்.மற்றும்படி கட்டிடப்பட கலைஞராகவும் கட்டடத் துறைசார் பொறியியலாளராகவும் எல்லாமுமாகவும் மேசனும் வீட்டுக்காரருமே தொழிற்படுவார்கள். இப்படித்தான் பெரும்பாலான தமிழர்கள் வீடு கட்டுகிறார்கள்.

இதே ஒழுக்கத்தை பொது வாழ்விலும் பல விடயங்களில் காணக்கூடியதாக இருக்கிறது.குறிப்பாக அரசியலில்,கட்டமைப்பு சார்ந்து சிந்திக்கின்ற, கட்டமைப்புகளுக்கு ஊடாக தொழில் புரிகின்ற போக்கு மிகப் பலவீனமாகவே இருந்து வருகின்றது. இந்த பலவீனமான ஒரு பாரம்பரியத்தின் பின்னணியில், தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த முற்படும் தரப்புகள் எல்லாவற்றையும் கட்டமைப்புக்களுக்கூடாகச் சிந்திப்பது என்பது முன்னேற்றகரமானது.இக்கட்டமைப்புகளில் ஆரம்பகட்டப் பலவீனங்கள் இருக்கலாம்.ஆனால் அவை பெரும்பாலும் ஜனநாயக முறைக்கூடாகத் தெரிவு செய்யப்பட்டவை.பொறுப்புக்கூறும் பண்புமிக்கவை. நீண்டகால நோக்கில் திட்டமிடப்படுகின்றவை. இப்படிப்பட்ட கட்டமைப்புக்கள் வினைத்திறனோடு செயல்படுமாக இருந்தால், எதிர்காலத்தில் தமிழரசியலானது அறிவுபூர்வமான, கட்டமைப்பு சார்ந்த,ஒரு புதிய பண்பாட்டை வளர்த்துக் கொள்ளும் என்று நம்பலாம்.