பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமிழரசுக் கட்சியை கைப்பற்றுவதற்கான சூழ்ச்சிகளை முன்னெடுத்து வருவதாக தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனுக்கு கே.வி.தவராசா கடிதமொன்றையும் அனுப்பியுள்ளார்.
அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தகைமையுள்ள பல்வேறு தமிழ்த் தேசிய ஆளுமைகள் இருக்கத்தக்கதாக நீங்கள் 2010ஆம் ஆண்டு சுமந்திரனை தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக்கி அரசியல் முகவரி கொடுத்தீர்கள்.
ஆனால் இப்போது அரசியல் ரீதியில் உங்களை ஓரங்கட்டிவிட்டு கட்சியின் மொத்தக் கட்டுப்பாட்டையும் தனது பிடிக்குள் கொண்டு வருவதற்கான அனைத்துவிதமான சூழ்ச்சிகளையும் சுமந்திரன் முன்னெடுக்கின்றார்.
சுமந்திரனின் தன்னிச்சையான முடிவுகளால் தமிழ்த் தேசியம் தேய்ந்து கட்சிக்கு ஏற்படுகின்ற பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காக கடந்த காலத்தில் நான் உங்களுக்கு பல கடிதங்களை எழுதியிருந்தேன்.
ஆனால், தூதிர்ஷ்டவசமாக நீங்கள் அவர் மீது எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்காமையின் விளைவுகளைத்தான் இப்போது பகிரங்கமாக காணக் கிடைக்கின்றது.
2015ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்காவிட்டால், தான் அரசியலை விட்டும் விலகப் போவதாகக் கூறிய சுமந்திரன் இப்போது உங்களைப் பதவிவிலகச் சொல்வது வேடிக்கையானது.
நீங்கள் வளர்த்த கடா பகிரங்கமாக பொதுவெளியில் வைத்து உங்களின் மார்பில் பாய்ந்துவிட்டது. திண்ணை எப்போது காலியாகும் என்ற அவரது எதிர்பார்ப்பு பகிரங்கமாகவே வெளிப்பட்டுவிட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவே நீங்கள் செயற்பட்டீர்கள். அதை இல்லாமல் செய்வதற்காகவே கடந்த உள்ளூராட்சித் தேர்தலுக்காக வேட்பு மனுக் கோரப்பட்டபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சிதைத்து தமிழரசுக் கட்சியை தனிமைப்படுத்தினார்.
தமிழ்த் தேசியக் கூட்டடைப்பை சுமந்திரன் திட்டமிட்டு சிதறடித்தமையின் நோக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவியில் இருந்து உங்களைத் தூக்கியெறிவதேயாகும்.
இப்போது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து உங்களை விலக நிர்ப்பந்தித்து அரசியலில் இருந்து உங்களை முற்றாக அகற்றுவதே அவரது இலக்காகும். அதைத்தான் பகிரங்கமாக அவர் வெளிப்படுத்தி இருக்கின்றார். உடல் ரீதியில் நீங்கள் பலவீனமுற்றாலும் மனரீதியில் மிகவும் வலிமையானவர். உங்களின் வலிமையைச் சிதைப்பதற்கே சுமந்திரன் பகிரங்கமாக இவ்வாறான. செயற்பாட்டில் இறங்கியுள்ளார்.
உடனடியாகக் கட்சி காப்பாற்றப்பட்டு தமிழ்த் தேசியத்தின் கனவுகளைச் சுமந்த மக்களின் அபிமானமிக்க தமிழ்த் தேசியவாதி ஒருவரைக் கொண்டு தலைமைத்துவத்தைப் பலப்படுத்தி கட் சியை நிலைப்படுத்தாவிட்டால் நிச்சயம் கட்சியின் இருள் சூழ்ந்த பக்கத்தை விரைவில் காணவேண்டி வரும். அது எமது இனத்துக்கு இழைக்கப்படும் வரலாற்றுத் துரோகமாகும் எனவும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.