தமிழ் கட்சிகளுக்கு இடையில் ஒற்றுமையை வலுப்படுத்த இன்று யாழில் பங்காளி கட்சிகளின் தலைவர்களுடன் தலைவர் செல்வம் சந்திப்பு

தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைமைகளுக்கு எந்தெந்த விடயங்களில் ஒருமித்த நிலைப்பாட்டில் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகித்து மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அதிகாரங்களை அரசாங்கம் கையகப் படுத்தி வருகின்ற சூழலை தடுத்து நிறுத்தவும் இருக்கக் கூடிய அதிகாரங்களை பாதுகாக்க வேண்டி ஆரம்பகட்ட மெய்நிகர் இணையவழி ஊடான கலந்துரையாடலுக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் விடுத்த வேண்டுகோள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

தமிழ் கட்சிகளுக்கு இடையில் ஒற்றுமையை வலுப்படுத்த புதிய முயற்சிகளை மேற்கொள்வதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகள் மூன்றும் கூட்டாக தீர்மானம் எடுத்துள்ளன.

இன்று காலை யாழ்ப்பாணத்தில் கூடிய மூன்று கட்சிகளின் தலைவர்களும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் த.சித்தார்த்தன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இன்று காலை மார்ட்டின் வீதியிலுள்ள இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில் சந்தித்துள்ளனர்.

சுமார் ஒரு மணித்தியாலயம் இந்த சந்திப்பு நடந்த நிலையில் 6 தமிழ் கட்சிகளிற்கிடையிலான சந்திப்பிற்கு தமிழீழ விடுதலை இயக்கம் விடுத்த அறிவிப்பு தொடர்பில் இதில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஏற்கனவே 9 கட்சிகளின் கூட்டு பேச்சு பாதி வழியில் நிற்கும் போது, ரெலோ திடீரென விடுத்த இந்த முயற்சி ஏற்படுத்திய சிக்கல்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

ஏற்கனவே 9 கட்சிகள் கூட்டு பேச்சு நடந்திருப்பதால், அந்த கட்சிகளையும் இணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய ஒற்றுமை முயற்சியை மேற்கொள்வதென தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் நாளைய தினம் சந்திப்பிற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் இதில் சீ.வி.விக்னேஸ்வரன் தரப்பு ஒரு பிரதிநிதியை அனுப்புவதாக கூறியுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளாது என தெரியவருகிறது. எனினும் தமிழ் மக்கள் கூட்டணியின் பிரதிநிதி வருவதால், நாளைய சந்திப்பை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கூட்டமைப்பாக புதிய கூட்டு முயற்சியை முன்னெடுப்பதென தீர்மானம் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.