பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முயற்சிக்கும் இலங்கைக்கு இந்தியாவிடம் இருந்து விரைவாக உதவிகள் கிடைப்பதை உறுதிப்படுத்த மேலதிக நேரம் பணியாற்றுவதாக இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி S.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவிற்காக வழங்கும் ஒரு பில்லியன் டொலர் கடன் உதவி விரைவில் கிடைக்க செயற்படுவதாகவும் இந்திய வௌிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.
அவர் நாடு திரும்புவதற்கு முன்னர் இலங்கையில் உள்ள இந்திய ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே இதனை தெரிவித்தார்.
இதேவேளை, உரிய நடைமுறையை பின்பற்றாமல் அதானி குழுமம் இலங்கையின் எரிசக்தி துறையில் பிரவேசித்துள்ளதாக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் ஊடகவியலாளர்கள் இந்திய வௌிவிவகார அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த கலாநிதி S.ஜெய்சங்கர், இந்திய அரசாங்கம் தனியார் துறையின் முதலீடுகளுடன் தொடர்புபடவில்லை என குறப்பிட்டதாக ‘த ஹிந்து’ செய்தி வௌியிட்டுள்ளது.
இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்ட அரசியல் கைதிகளின் விடுதலை, காணிப் பிரச்சினை, காணாமலாக்கப்பட்டவர்கள் விவகாரம் மற்றும் அபிவிருத்தி ஆகிய நான்கு விடயங்களும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நீண்டகால பிரச்சினைகள் என கலாநிதி S.ஜெய்சங்கர் கூறினார்.
இந்த விடயங்கள் தொடர்பாக முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் நல்லிணக்கம் மற்றம் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு வழிவகுக்கும் என இந்திய வௌிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.
ஆனால், அது இந்த விடயங்கள் தொடர்பிலான கலந்துரையாடல்களின் முடிவாக அமையாது எனவும் அரசியல் தீர்வே முக்கியமானது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.