ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினுடைய தற்போதைய செயற்பாடுகள் மகிழ்ச்சியளிக்கின்றன. அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கு எம்மால் எடுக்கப்பட்ட தீர்மானம் தவறானதல்ல என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பத்தரமுல்லையிலுள்ள பொதுஜன பெரமுன அலுவலகத்தில் ஊடக மத்திய நிலையம் ஆரம்பிக்கப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளமையை முன்னிட்டு திங்கட்கிழமை (டிச.05) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன் போது தொடர்ந்தும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,
தற்போது தேர்தலுக்கான காலம் உருவாகியுள்ளது. எனினும் அது எவ்வாறு இடம்பெறும் என்பது எமக்குத் தெரியாது. கட்சி என்ற ரீதியில் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடுவதற்கு நாம் தயாராகவே உள்ளோம். இதுவரை போட்டியிட்ட சகல தேர்தல்களிலும் நாம் வெற்றி பெற்றுள்ளோம். இதற்காக நாம் முழு நாட்டு மக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். எவ்வாறிருப்பினும் மக்களின் எதிர்பார்ப்பினை நூறு வீதம் நிறைவேற்றத் தவறியிருந்தால் அது தொடர்பில் கவலையடைகின்றோம்.
நிச்சயம் எமது குறைபாடுகளை தீர்வு மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். நான் செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டுள்ள போதிலும் , அரச நிர்வாகத்தில் ஈடுபடவில்லை. தற்போது 21ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக அரச நிர்வாகத்தில் ஈடுபடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதல்லவா? எவ்வாறிருப்பினும் அரச நிர்வாகத்தில் நான் இல்லாத போதிலும் அரசியலில் இன்னும் இருக்கின்றேன். நான் மீண்டும் பாராளுமன்றத்திற்கு செல்ல எதிர்பார்க்கவில்லை. என்னால் பாராளுமன்றத்திற்கு செல்லவும் முடியாதல்லவா? அது தொடர்பில் நான் மகிழ்வடைகின்றேன்.
69 இலட்சம் பொது மக்கள் வாக்களித்து தெரிவு செய்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியை இராஜநாமா செய்தார். அதனையடுத்து பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியொருவரை தெரிவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்ட போது , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கு தீர்மானித்தது. எமது இந்த தெரிவு தவறானதல்ல என்று எண்ணுகின்றேன்.
தற்போது ஆளும் , எதிர்க்கட்சி என அனைவரும் சுதந்திரமாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகக் காணப்பட்டது. அந்த சூழல் தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
பொது வெளியில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுவதற்கான சூழலை ஜனாதிபதி எமக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றார். அதே போன்று பொருளாதாரம் மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வு காணுவார் என்று பாரிய எதிர்பார்ப்பு எம் மத்தியில் காணப்படுகிறது.
பொதுஜன பெரமுனவில் எந்தவித பிளவும் கிடையாது. மக்கள் மத்தியில் நாம் ஒருமித்தே காணப்படுகின்றோம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளராக உத்தியோகபூர்வமாக இன்னும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் பதவி வகிக்கின்றார். எதிர்காலத்தில் புதியவர்கள் தெரிவு செய்யப்படுவர் என்றார்.