தற்போதைய அரசியல் நிலை குறித்து ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் இணையவழிக் கலந்துரையாடல்

தற்போதைய அரசியல் நிலை குறித்து ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் இணையவழிக் கலந்துரையாடல்  இன்றைய தினம் நடைபெற்றதாக தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒருங்கிணைப்பாளரும் ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளருமான  சுரேந்திரன் தெரிவித்தார்.

இதில் கட்சித் தலைவர்கள் நீதியரசர் விக்னேஸ்வரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் ஸ்ரீகாந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.  பயணம் காரணமாக சித்தார்த்தன் அவர்களால் கலந்து கொள்ள முடியவில்லை. எனினும் ஆதரவு தெரிவிக்கப்பட்டது

ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ள ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் 17 ஞாயிறு காலை 11 மணிக்கு தற்போதைய அரசியல் சூழ்நிலை பற்றிய இறுதி நிலைப்பாடு சம்பந்தமாக இணைய வழியில் சந்தித்து உரையாடினர். கடந்த இரு வாரங்களாக தொடர்ச்சியாக தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழ்நிலை, தமிழ் மக்கள் நிலைப்பாடு , இதை எப்படிக் கையாள்வது என்பது குறித்து இணைய வழியினூடாக பல சந்திப்புகள் நடைபெற்றன.

இறுதியாக 17 ஞாயிறுக் கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர்கள், வரப்போகும் அரச தரப்பு, போராட்ட அமைப்புகள் ஆகியோரிடம் தமிழ் மக்கள் சார்பில் கோரிக்கை ஒன்றை முன்வைப்பதாக தீர்மானிக்கப் பட்டது. அக்கோரிக்கைள் சம்பந்தமான தயாரிக்கப்பட்ட வரைபும் பரிசீலிக்கப்பட்டது.

நாளை 18, திங்கள் காலை 11 மணிக்கு மீண்டும் கூடி இக் கோரிக்கையை இறுதி செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கான சர்வதேச ஆதரவை ஒருங்கமைக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் தமது எதிர்கால அரசியல் இருப்பை தீர்மானிக்க மீண்டும் கிடைத்துள்ள இச்சந்தர்ப்பத்தை தமிழர் தரப்பு ஒருமித்த நிலையில் கையாள்வதானது எமது மக்களுக்கான உறுதியான முக்கிய மாற்றங்களை ஏற்படுத்த வழி அமைக்கும்  என நம்பிக்கை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் எமது மக்கள் நலன் கருதி தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடமும் இம்முயற்சியில் இணைந்து கொள்வதற்கான  கோரிக்கை முன்வைக்க தீர்மானிக்கப் பட்டது.

தமிழ் தேசிய பரப்பிலே பயணித்துக் கொண்டிருக்கும் கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டில் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் கலந்துரையாடல்கள் மற்றும் செயல்பாடுகள் வெற்றிகரமாக நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே.