தவறு செய்து விட்டேன் – விலக மாட்டேன் – ஜனாதிபதி தெரிவிப்பு

இலங்கையின் வரலாற்றில் மிகவும் கடினமான அதே போன்று, சவாலான பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக, சமூக ரீதியாக நாடு தீர்மானமிக்கதொரு தருணத்தை எதிர்கொண்டுள்ள சந்தர்ப்பத்திலேயே இன்று நான் உங்களிடம் உரையாற்றுகிறேன்.

இன்று சிரேஷ்ட நிலை பாராமல் புதிய அமைச்சர்களை நியமித்துள்ளேன். அமைச்சர் பதவி என்பது ஒரு வரப்பிரசாதம் அல்ல. அது ஒரு பாரிய பொறுப்பு ஆகும். அமைச்சர் என்ற முறையில் கூடுதல் சலுகைகள் எதையும் பயன்படுத்த வேண்டாம் என்று நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். நேர்மையான, திறமையான மற்றும் தூய்மையான நிர்வாகத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதையே நான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.

மேலும், உங்கள் கீழ் உள்ள நிறுவனங்களை ஊழலற்ற, மக்களுக்கு சேவை செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படும் நிறுவனங்களாக மாற்றுங்கள். பல அரச நிறுவனங்கள் இன்று கடும் நிதி நெருக்கடியில் உள்ளன. அவை சரி செய்யப்படுவது மிகவும் அவசியம். நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய பணிகளில் இதுவும் ஒன்றாகும். இந்த அமைச்சுப் பதவிகள் கிடைத்தவுடன், தமக்குக் கிடைக்கும் அமைச்சுக்களிலும் நிறுவனங்களிலும் தொழில் வழங்குவதற்குத் தயாராகி வருவதை நாம் அறிவோம்.

இத்தகைய சூழ்நிலையில் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அமைச்சுக்கள் உண்மையில் செய்ய வேண்டியது தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதுதான்.

மக்கள் கோரிய முறைமையை (System Change) மாற்ற இன்றைய நெருக்கடி ஒரு நல்ல சந்தர்ப்பம். உங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதே நேரத்தில், இந்த இளைஞர்களிடம் அதற்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த இரண்டரை வருடங்களாக நாங்கள் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளோம். கொவிட் தொற்றுநோய் அதேபோன்று கடன் சுமை போன்ற விடயங்கள். அவ்வாறிருந்தாலும் எங்களாலும் பல தவறுகள் இடம்பெற்றுள்ளன. அவை சரி செய்யப்பட வேண்டும். அவற்றை சரி செய்து கொண்டே நாம் முன்னேற வேண்டும். மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு திட்டத்திற்கு இதற்கு முன்னர் சென்றிருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். அதே போன்று, இரசாயன உரங்களை விவசாயிகளுக்கு வழங்காமல் இருந்தது தவறு என நினைக்கிறேன்.அவற்றை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இந்த பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட பல சிக்கல்களால் இன்று மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.

வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாத மக்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பெற வரிசையில் நின்று நேரத்தைச் செலவழிப்பதால் ஏற்படும் வேதனையும், அசௌகரியமும், கோபமும் மிகவும் நியாயமானது.

கடந்த காலத்தில் என்ன குறைகள் ஏற்பட்டு இருந்தாலும், தற்போதைய சவால்கள் மற்றும் சிரமங்களை நிர்வகிப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியான எனது பொறுப்பாகும். எந்த சிரமத்திற்கும் சவாலுக்கும் மத்தியிலும் அந்தப் பொறுப்பில் இருந்து விலக மாட்டேன் என்று என்னை நியமித்த மக்களிடம் உறுதியளிக்கிறேன்.

தற்போது சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளில் நாம் முன்னுரிமை வழங்க வேண்டியது, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கே ஆகும். அதைத் தீர்க்காமல் வேறு எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாது.

எனவே, நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நான் ஏற்கனவே பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளேன்.

அதன் அடிப்படையான மற்றும் முக்கியமான நடவடிக்கைகளாக புதிய நிதியமைச்சர் ஒருவர், நீண்டகால அனுபவமுள்ள மத்திய வங்கியின் புதிய ஆளுநர் மற்றும் திறைசேரியின் புதிய செயலாளரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பொருளாதார முகாமைத்துவம் தொடர்பாக அரசாங்கத்திற்கும் எனக்கும் ஆலோசனை வழங்குவதற்காக சர்வதேச அனுபவமும் பொருளாதார முகாமைத்துவத் துறையில் உயர் அங்கீகாரமும் கொண்ட மூன்று பொருளாதார நிபுணர்களை நியமித்துள்ளேன். மேலும், அரசுக்கு உதவுவதற்காக பொது மற்றும் தனியார் துறை நிபுணர்கள் அடங்கிய குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

World Express Services
இந்த குழுவுடன் இணைந்து கடந்த சில நாட்களாக நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் நிலை நிறுத்த நாம் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம்.

நாம் எப்போதும் மக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டும். மக்களிடம் யதார்த்தத்தை மறைப்பதில் அர்த்தமில்லை. நீங்கள் பெறும் தகவல்களைப் பற்றி அறிவுபூர்வமாக விசாரித்து உண்மைகளைப் புரிந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

பிரச்சினையை புரிந்து கொண்டால் மட்டுமே தீர்வு காண முடியும். அதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் அங்கீகாரமும் அவசியம்.

இன்று நமது நாடு கடுமையான அந்நியச் செலாவணி பற்றாக்குறையையும் கடன் நெருக்கடியையும் சந்தித்து வருகிறது. இந்த நேரத்தில் எங்களிடம் உள்ள மட்டுப்படுத்தப்பட்ட அந்நியச் செலாவணியை மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்குப் பயன்படுத்த வேண்டும். மேலும் அவசர அந்நியச் செலாவணி தேவைகளுக்குப் பணம் தேட வேண்டும்.

குறுகியகால வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் உள்ள எங்களின் சிரமத்தை நாங்கள் ஏற்கனவே கடன் வழங்கியவர்களுக்கு தெரிவித்துள்ளோம். அதன்படி கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள எனது பொருளாதார முகாமைத்துவக் குழு ஏற்கனவே எமது நட்பு நாடுகளுடனும் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்களுடனும் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது.

ஒரு மாதத்திற்கு முன்பு, சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு வேலைத்திட்டத்தில் இணைய விருப்பம் உள்ளதாக அரசாங்கம் அறிவித்தது. அந்த கலந்துரையாடல்களை முன்னெடுத்துச் செல்வதற்காக நிதி அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்கனவே அமெரிக்கா சென்றுள்ளனர்.

எண்ணெய், மருந்துப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இந்தியாவிடமிருந்து கடன் வசதிகளைப் பெற்றுள்ளோம். மேலும், உலக வங்கி எரிவாயு, உரம், பால்மா மற்றும் மருந்துப் பொருட்கள் இறக்குமதிக்கு ஒத்துழைப்பு வழங்கவும் முன்வந்துள்ளது.

நாட்டு மக்களுக்கு தேவையான எண்ணெய் மற்றும் எரிவாயு தற்போது நாட்டுக்கு கிடைக்கப் பெற்றாலும், சமீப நாட்களாக அது முறையாக விநியோகிக்கப்படவில்லை. இதன் காரணமாக மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை குறைக்கும் வகையில் நாம் தற்போது செயற்பட்டு வருகின்றோம்.

சந்தையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு மற்றுமொரு முக்கிய காரணம், எதிர்காலத்தில் தட்டுப்பாடு ஏற்படும் என சந்தேகித்து மக்களால் பெருமளவில் எரிபொருள் களஞ்சியப்படுத்தப்படுகின்றமை ஆகும். இதன் காரணமாக நாட்டில் எரிபொருளுக்கான தேவை கணிசமான அளவு அதிகரித்துள்ளது.

மக்கள் படும் இன்னல்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் கும்பல் ஒன்றும் உருவாகி உள்ளது. இந்த நிலையை கட்டுப்படுத்தவும் அரசு தலையிட்டு வருகிறது. இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில், இவ்வாறான விடயங்களை தவிர்க்குமாறு நான் அவர்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.

எதிர்வரும் வாரங்களில் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான தீர்வுகள் மற்றும் தீர்மானங்களையும் நாங்கள் ஏற்கனவே எடுத்துள்ளோம். நாம் அவற்றைச் செயற்படுத்தி வருகிறோம்.

அண்மைக்காலமாக நீண்டகால மின்வெட்டுக்கு மின் உற்பத்தி நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டமையே காரணம் ஆகும்.

சிக்கல்களுக்கு மத்தியிலும் தேவையான எரிபொருளை பெற்றுக்கொண்டு, எதிர்வரும் காலத்தில் மின்வெட்டை இரண்டு மணித்தியாலங்களாக மட்டுப்படுத்திக்கொள்ள நாம் எதிர்பார்க்கிறோம்.

குறுகியகால பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தேடுவதோடு, இந்த நிலை மீண்டும் ஏற்படாமல் தடுக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காக பல தசாப்தங்களாக காலதாமதமாகி வரும் சில தீர்மானங்களை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் நாம் எடுக்க வேண்டியுள்ளது. பொருளாதாரத்தை சரியான திசையில் வழிநடத்தி, நமது எதிர்கால சந்ததியினரின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு இப்போது நமக்கு உள்ளது.

இன்று நாம் எதிர்கொள்ளும் கடுமையான சவாலை சமாளிக்க, சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச நிறுவனங்களைப் போன்று நட்பு நாடுகளின் ஒத்துழைப்பும் அவசியம். நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டால் மட்டுமே அந்த ஒத்துழைப்புகளைப் பெற முடியும்.

இந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் முன்னேற்றத்திற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணையுமாறு நான் அழைக்கிறேன். மேலும், இந்த நெருக்கடியைத் தீர்ப்பதில் எங்களுடன் இணையுமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் நான் அண்மையில் அழைப்பு விடுத்தேன். என்னுடைய அழைப்பை ஏற்று எங்களுடன் இணைந்து பணியாற்ற அவர்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது.

இந்த கடினமான காலங்களில், அரச நிர்வாகத்தை முன்னெடுக்கவும், சர்வதேச சமூகத்தை கையாளவும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அமைச்சர்களை நியமிக்க நான் முடிவு செய்தேன். புதிய அமைச்சரவையை நியமிப்பதில் ஆளும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் தாமாக முன்வந்து அமைச்சரவையில் இருந்து விலகியதன் மூலம் இளைஞர்கள், படித்தவர்கள் என ஒரு புதிய குழுவுக்கு இடம் கொடுத்துள்ளனர்.

ஆசியாவின் பழமையான ஜனநாயக நாடுகளில் இலங்கையும் ஒன்று. அனைத்து குடிமக்களின் பாதுகாப்பும் சுதந்திரமும் அரசியலமைப்பின்படி செயற்படும் ஜனநாயக ஆட்சிமுறையில் தங்கியுள்ளது.

சமூகத்தின் மிகவும் சுறுசுறுப்பான பகுதியினரான இளைஞர்கள் தங்கள் அழுத்தத்தை அவர்களுக்கே உரிய வழியில் வெளியிடுவதில் எந்த தவறும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க உள்ள இளைஞர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும், ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்யவும், போராட்டங்களை நடத்தவும் இன்று முழு சுதந்திரம் பெற்றுள்ளனர்.

அவர்கள் தமது போராட்டங்களை ஆக்கப்பூர்வமாக முன்னெடுத்துச் செல்லும் போது, ஒழுக்கத்துடன் கடமையாற்றும் பொலிஸார், முப்படையினர் மற்றும் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளை குறிப்பாக நான் பாராட்டுகின்றேன்.

உங்களுக்குத் தெரியும், கடந்த இரண்டரை ஆண்டுகளில், நான் போராட்டங்களுக்கு, ஊர்வலங்களுக்கு, ஆர்ப்பாட்டங்களுக்கு இடமளித்து இருந்தேன். சுதந்திரம் வழங்கியுள்ளேன். என் அலுவலகத்திற்கு அருகில் வந்த போராட்டக்காரர்களை கலைக்கக்கூட நான் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த எதிர்ப்பாளர்களில் பெரும்பான்மையானவர்கள் தங்கள் நாட்டை உண்மையாக நேசிக்கும் இளைஞர்கள் என்று நான் நம்புகிறேன். அவர்கள் நாட்டுக்காக முன்வருவதை எதிர்காலத்திற்கான சாதகமான அடையாளமாகவும் பார்க்கிறேன்.

இனம், மதம், அரசியல் வேறுபாடின்றி நாட்டை நேசிக்கும் பெரும்பாலான மக்கள் தற்போதைய ஆட்சியின் தவறுகளை திருத்தி நாட்டைக் கட்டியெழுப்பவே விரும்புகின்றார்கள், நாட்டைத் தோல்வி அடையச் செய்வதற்கு அல்ல என்று நான் நம்புகிறேன். எனவே, உங்கள் ஜனநாயகப் போராட்டங்களை வன்முறைப் பாதையில் திசை திருப்ப சந்தர்ப்பவாதிகளுக்கு இடமளிக்க வேண்டாம் என்று இந்த இளைஞர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

மதிப்பிற்குரிய மகாசங்கத்தினர், மதகுருமார்கள், தொழில் வல்லுநர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மற்றும் பல்வேறு அரசியல் குழுக்களின் உறுப்பினர்கள் உட்பட பலர் நாட்டின் நிலைமை மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். அந்த ஆலோசனைகள் அனைத்தையும் நான் உணர்வுபூர்வமாகக் கேட்கிறேன்.

அறுபத்து ஒன்பது இலட்சம் மக்கள் தமது வாக்குரிமையைப் பயன்படுத்தி மிகுந்த நம்பிக்கையுடன் என்னிடம் பொறுப்பை ஒப்படைத்தனர். எனது பதவிக்காலத்தில் அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளேன். அதன்படி, தற்போதைய நெருக்கடியை மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை வழங்குவதற்கு ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்கிறேன்.

இந்த நாட்டு மக்களின் பணத்தை நான் திருடியதில்லை. அன்றும் இன்றும் என் கைகள் சுத்தமாகவே உள்ளன. நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டது பலரது கோரிக்கைகளுக்காகவே அன்றி அதிகார தேவைக்காக அல்ல. எனது வாழ்நாளில் முப்படையில் அதிகாரியாக 20 ஆண்டுகள் இந்த நாட்டிற்கு சேவை செய்துள்ளேன். நான் வெற்றிகரமாக சேவை செய்துள்ளேன். அத்துடன், பாதுகாப்புச் செயலாளராக நான் இந்த நாட்டுக்கு வெற்றிகரமாக சேவையாற்றியுள்ளேன். நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகவும் அர்ப்பணிப்புடன் கடமையாற்றியுள்ளேன்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி என்ற முறையில், அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் கட்டமைப்பிற்குள் நான் எப்போதும் செயற்படுகின்றேன்.

நாட்டின் சட்டமியற்றும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உள்ளது. எனவே, அரசியலமைப்பில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துக்களை பாராளுமன்றத்தில் கலந்துரையாடி தேவையான மாற்றங்களை நிறைவேற்ற வாய்ப்பு உள்ளது. அது தொடர்பில் அவசியமான ஒத்துழைப்பை எந்த நேரத்திலும் பாராளுமன்றத்திற்கு வழங்குவதற்கு நான் தயாராக உள்ளேன்.

அதற்கிணங்க, நாட்டின் அதியுயர் அரசியலமைப்புக்கு மதிப்பளித்து, எதிர்காலத்தில் தேவையான மாற்றங்களைச் செய்து, இந்த நெருக்கடியிலிருந்து நாட்டை விடுவிப்பதாக நான் உறுதியளிக்கிறேன், மேலும் இது தொடர்பாக மக்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குமாறு நான் உங்கள் அனைவரிடமும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மீண்டும் ஒருமுறை உங்களை வாழ்த்துகிறேன். மேலும் மக்கள் எதிர்பார்ப்பது போல் நேர்மையாகவும், திறமையாகவும், தூய்மையாகவும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நான் மீண்டும் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.