கொரோனா வைரஸ் தொற்றை கருத்திற்கொண்டு, மன்னார் திருக்கேதீஸ்வர கோவிலில், வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தருகின்றவர்களைத் தவிர்த்து, மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்களின் பங்களிப்புடன் மஹா சிவராத்திரி விழாவை கொண்டாடுதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டச் செயலகத்தில், நேற்று (15) மாலை மன்னார் மாவட்டச் செயலாளர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் தலைமையில் நடைபெற்ற மன்னார் திருக்கேதீஸ்வர மஹா சிவராத்திரி விழா தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே, இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
அத்துடன், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், திருக்கேதீஸ்வர மஹா சிவராத்திரி விழாவின் போது பாலாவி தீர்த்தக்காவடியையும் நிறுத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருக்கேதீஸ்வரத்துக்கு வருகின்றவர்கள், சுகாதார நடை முறைகளை உரிய வகையில் பின்பற்ற வேண்டுமெனவும், இதன்போது அறிவுறுத்தப்பட்டது.