திலீபனின் நினைவேந்தல்- வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் ஈகைச்சுடரேற்றி அஞ்சலி

தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினால் அது சுகாதார விதிமுறைகளை மீறும் செயற்பாடு. ஆனால் பண்டாரநாயக்காவுக்கு அஞ்சலி செலுத்தினால் சுகாதாரம் மீறப்படாது. இதுதான் அரசாங்கத்தின் இனரீதியிலான அணுகுமுறை என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)  யாழ் மாவட்ட அமைப்பாளரும், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான  தியாகராஜா நிரோஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தியாக தீபம் திலீபனின் 34 ஆவது நினைவேந்தலை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், தனது குடும்பத்தினருடன் சுகாதார நடைமுறைக்கு அமைய, ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தியாகராஜா நிரோஷ் மேலும் கூறியுள்ளதாவது, “தியாகி திலீபனின் 34 ஆவது நினைவு தினம் இன்று ஆகும். அவர் உண்ணாநோன்பிருந்த இடத்தில் தமிழ் மக்கள் அஞ்சலிப்பது தேசியக்கடமையாக இருக்கின்றது.

ஆனால், தமிழர்களான நாம் தியாகி திலீபனின் சிலைக்கு அண்மையில் கூட செல்ல முடியாதவர்களாகத் தடுக்கப்பட்டுள்ளோம்.

ஏற்கனவே  நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் அஞ்சலித்தமைக்காக, தனிமைப்படுத்தல் விதிமுறைகளின் பிரகாரம் கைது செய்யப்பட்டிருந்தார். இவ்வாறாக இராணுவமும் பொலிஸாரும் நினைவுகூர்தல் சுதந்திரத்திற்கு தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா சுடப்பட்டு 62 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

அந்த நினைவு கூர்தல் நிகழ்வு பெருமளவானோரின் பங்குபற்றுதலுடன் பண்டாரநாயக்கா சமாதியில் இடம்பெற்றுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தின் பங்காளிகள் எனப் பலரினதும் பிரசன்னத்துடன் தடைகள் இன்றி அஞ்சலிக்கப்பட்டுள்ளது.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இறந்தவர்களை நினைவில் கொள்வதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் நாம் தமிழர் என்பதற்காக அரசாங்கம் வேறுபட்ட அணுகுமுறை வாயிலாக எமது நினைவுகூரலைத் தடுக்கின்றது என்பதே பிரச்சினை.

பொலிஸாரும் இராணுவத்தினரும் அரசாங்கத்தின் உள்நோக்கத்தினை சட்டம் ஒழுங்கு என நடைமுறைப்படுத்துகின்றனர்” என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.